Saturday, April 30, 2011

அம்மா என்னும் தொழிலாளி


அம்மா - அம்மா என்னும் வர்க்கம் போன்று ஒரு உழைக்கும் வர்க்கம் உண்டா? குடும்ப பிரச்சினைகளோடு போராடும் ஒரு பாட்டாளி வர்க்கம் உண்டா?

வாழ்நாள்தோறும் தனது குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு உன்னத தொழிலாளி நமது வீட்டு "அம்மா".

அவள், கடமையை கண்ணென கருதும் உலக தொழிலாளார்களுக்கு எல்லாம் முன்னோடி.

இந்த தருணத்தில், நான் உங்கள் முன் நிறுத்த விரும்பும் ஒரு செய்தி...மாக்ஸிம் கார்க்கி எழுதிய, ரஷிய தொழில் புரட்சியை,பொதுவுடைமை சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட உலகின் தலைசிறந்த நாவல்..."தாய்".

அதில், குடும்பத்திற்காக அடுப்படியில் வேகும் ஒரு புரட்சிக்காரனின் தாய், அவன் தன் நண்பர்களோடு நடத்தும் விவாதங்களை கேட்டு, அதில் பங்கு கொண்டு, பின்னர் பொதுவுடைமை புரட்சிக்கே தலைமை ஏற்கும் போராட்ட வீராங்கனையாக உருவாகிறாள்.

மே தினத்தின் ஒரு புதிய சிந்தனையாக நாம் இதனை நம் கவனத்தில் வைப்போம்.

அம்மா என்னும் கடவுளின் தொழிலாளிக்கு வந்தனம்.

கடைத்தெரு வாடிக்கையாள அன்பர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்கள்

இங்கே...கிராமத்தில் தனக்காக ஓடாய் உழைத்த தனது ஏழைத்தாயின் நினைவுகளை பகிர்கிறார் கவிஞர் வைரமுத்து.



-இன்பா

Friday, April 29, 2011

'தல' அஜித் & அமரர்.சுஜாதா - "பிறந்த நாள்" சிறப்பு பதிவுகள்



நடிகர் அஜித்குமார் (பிறந்த தேதி : 1-05-1971 )

"நான் இப்போது என்னுடைய 50 வது படம் செய்கிறேன். இதுவரை கடந்து வந்த பாதையை பார்த்தால், சினிமாவில் எனது பயணம் மிகவும் கடினமானது. நிலையில்லாத திரையுலகில் இவ்வளவு காலம் நிலைத்து இருப்பது சாதாரண விஷயம் இல்லை.அது ஒரு கயிற்றின் மீது நடப்பது போல " என்கிறார் அஜித்.

அவரது 50 வது படமான "மங்காத்தா" பற்றி இப்படி பேசுகிறார் அஜித்.

சினிமா என்கிற முகம் கடந்து நிஜ வாழ்விலும் ஒரு "ஹீரோ" வாக வாழ்பவர் அஜித்.

அவரது சில சில "அசல்" பக்கங்கள்..

பைக் மெக்கானிக்: சென்னை அசன் மெமோரியல் பள்ளியில் படிக்கும்போதே, பைக்குகள் என்றால் தீராத காதல். பள்ளி வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 'பகுதி நேர' பைக் மெக்கானிக் ஆக பணிபுரிந்தார் அஜித்.

பைக் ரேஸ்:1990 இல 110 சி.சி மோட்டார் பைக் பிரிவுக்கான "இந்தியன் நேஷனல் சாம்பியன் ஷிப்" போட்டியில் கலந்து கொண்டார் அஜித். அப்போது அவரது வயது 19.

கார்மெண்ட்ஸ் தொழில்: அதன் பின்னர், ஈரோட்டில் துணிகள் ஏற்றுமதி செய்தார் அஜித். இதற்க்காக தனியாக ஒரு ஏஜென்சி ஒன்றை நடத்திவந்தார்.

மாடலிங்: ஏற்றுமதி தொழிலில் இருந்த அஜித், தனது நண்பர்களின் ஆலோசனைபடி கூடுதல் வருமானத்திற்கு, மாடலிங் செய்ய தொடங்கினார்.

சினிமா: இத்தனையும் அவர் செய்தது அவரது 21 வயதுக்குள். மாடலிங் அவரது சினிமா பிரவேசத்திற்கு அடிக்கல் ஆனது. பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படம்தான் அவரது முதல் சினிமா. இரண்டாவது படம்தான் தமிழில் வந்த அமராவதி. ஆசை, காதல் கோட்டை போன்ற பெரும் வெற்றி படங்கள் மூலமாக ஒரு காதல் நாயகனாக உருவான அஜித், வாலி மூலமாக தான் ஒரு மிக சிறந்த நடிகர் என்று நிரூபித்தார். 'தீனா' - அஜித்தை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, ஒரு முன்னனி நடிகர் ஆக்கியது.

ஏற்ற,இறக்கங்கள் நிறைந்தது அஜித்தின் சினிமா பயணம். இடையே ஒரு விபத்தில் பாதிக்கபட்டது காரணமாக அவரால் சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாததும் ஒரு காரணம். அதன் பின்னர், ரஜினி அவர்களின் ஆசியோடு 'பில்லா'வில் மீண்டும் எழுச்சி பெற்ற அஜித்துக்கு அதன் பின் வந்த 'ஏகன்',
அசல் என்று ஒரு சிறு சறுக்கல்.

அஜித் தற்சமயம் நடித்து வரும் 50 வது படமான "மங்காத்தா" ' அதிக எதிர்பார்ப்புக்கள் உள்ள படமாக பேசப்பட்டு வருகிறது.

கார் ரேஸ்: 2003 இல ஆசிய அளவிலான 'பி.எம்.டபிள்யு சாம்பியன்ஷிப்' என்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்டு, நான்காம் இடத்தை பிடித்தார் அஜித்.

2004 இல 'பிரிட்டிஷ் பார்முலா - 3 ' ரேசில் கலந்துகொண்டு, இரண்டு சுற்றுகளில் மூன்றாம் இடத்திற்கு வந்தார். இந்த ரேசில் முதல் இடம் வந்த நெல்சன் பிக்வெட், இன்றைய பார்முலா பந்தயங்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.

ஏரோநாட்டிக்ஸ் : நமது இந்திய சினிமா நடிகர்களில் விமானம் ஓட்டதெரிந்த ஒரு சில நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.

தற்சமயம் 'ரேடியோ கன்ட்ரோல் பைலட்ஸ் அசோசியஷன்' என்ற நிறுவனத்தை தொடங்கி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட முறையில் ஒரு 'ஹெலிகாப்டரை' உருவாக்கி கொண்டு இருக்கிறார்.

ஜேப்பியார் கல்லூரி மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்ஸ் சம்பந்தமாக செயல்விளக்கம் அளித்து இருக்கிறார் அஜித்.

அஜித்துக்கு சமிபத்தில் விமானம் ஓட்டும் பைலட் லைசென்ஸ் கிடைத்து இருக்கிறது. இந்தியாவில் இந்த லைசென்ஸ் பெற்ற நடிகர் இவர் ஒருவரே.

சமையல் கலை: அஜித்துக்கு சகல சமையலும் அத்துப்படி. 'பில்லா' படபிடிப்பு மலேசியாவில் நடந்தபோது, யூனிட்க்காரர்களுக்கு ஒரு நாள் இவரே சமைத்து, பரிமாறியும் இருக்கிறார்.

ஆன்மிகம்: "இதுவே என் கடைசி பிறவியாக இருக்கவேண்டும்" என்று தத்துவார்த்தமாக கூறும் அஜித் தீவிர சாய்பாபா பக்தர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடைபயணம் செல்லும் வழக்கம் உடையவர். புனே போன்ற வட மாநிலங்களில் இருக்கும் ஆஷ்ரமங்களுக்கு செல்லும் வழக்கமும் உடையவர். அதேசமயம், திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு தர்காவுக்கும் செல்கிறார் அஜித்.

"அஜித்தான் எனது ரோல் மாடல்" என்று சொல்கிறார் சென்னையை சேர்ந்த பிரபல "பைக் ரேசர்" சரத்குமார். "அஜித் என்னுடைய பைக்கைதான் "ரேசில்" கலந்துகொள்ள பயன்படுத்தினார்" என்று சொல்கிறார் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற பெண் பைக் சாம்பியன் அலிஷா அப்துல்லா.

"பணக்கார,ஏழை விளையாட்டுன்னு தரம் பிரிக்காதிங்க. எந்த விளையாட்டுக்கும் பணம் மூலதனமா இருக்கமுடியாது. கடின உழைப்பு மட்டும்தான் இருக்கமுடியும். அது என்கிட்ட இருக்குன்னு பெருமையா சொல்லிக்கிறேன்" என்று பேசும் அஜித், தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணமாய் சுட்டிகாட்ட வேண்டியவர்தானே?

"எல்லாரும் ஒரு வாழ்க்கை இருக்கு. அதில் முட்டி முன்னேறி வெற்றிபெறனும்.சாதிக்கணும். இதுதான் என் ஒவ்வொரு நாள் கனவா இருந்தது. இருந்துகிட்டு இருக்கு" என்று கூறும் அஜித் நிஜமாகவே ஒரு அல்டிமேட் ஸ்டார்தான்.

மே 1 - அவரது பிறந்த நாளன்று, 'தல' ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாள் பரிசாக "மங்காத்தா" வெளிவருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. தற்சமயம் ஜூன் அல்லது ஜூலைக்கு படத்தின் ரீலீஸ் தள்ளிபோயிருக்கிறது.

"எனது படங்களுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், இதற்க்கு நான் தகுதியானவன்தானா என நானே யோசிக்கறேன்" என்கிறார் அஜித்.
அந்த தன்னடக்கம்தான் "தல".

"நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன்.

வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும் "

ஊருக்கு ஊர் ரசிகர் மன்றங்களை திறந்து, அப்படியே கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதே அன்று வந்த நடிகர்கள் முதல் இன்று வந்த நடிகர்களின் "லட்சியமாக" இருக்கிறது.

ஆனால், இப்படிப்பட்ட சினிமா நடிகர்களுக்கு மத்தியில்,"ரசிகர் மன்றங்கள் கலைப்பு" என்று எந்த ஒரு நடிகரும் யோசிக்க கூட தங்குகிற ஒரு விஷயத்தை, தனது பிறந்த நாள் அன்று அறிவித்து இருக்கிறார் அஜித்.

அஜித்துக்கு ரசிகராக இருப்பதே பெருமை.'தல' தலதான்.



எழுத்தாளர் அமரர்.சுஜாதா (பிறந்த தேதி : 3 - 5 - 1935 )



விண்வெளிக்கு அனுப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்து விடுகிறது. நாட்டுக்கு சேவை செய்யும் தன்னற ஆர்வத்துடன், தன் மனைவியை பிரிந்து,அந்த பழுதை சரிசெய்வதற்காக விண்ணுக்கு செல்கிறான் இளம் விஞ்ஞானி ஒருவன். செயற்கைகோளின் பழுதை வெற்றிகரமாக சரிசெய்துவிடுகிறான். அவ்வேளையில்,அவன் சென்ற விண்கலம் செயல் இழந்து விடுகிறது. அவனை காப்பாற்ற வேண்டுமானால், கோடிகளை செலவு செய்து, ஒரு விண்கலத்தை அனுப்பவேண்டும். ஆனால், அரசு அவனை தியாகி என்று அறிவித்து, கைவிட்டுவிடுகிறது.

நான் பள்ளி நாட்களில் படித்த என்னால் இன்றும் மறக்க முடியாத ஒரு விஞ்ஞான சிறுகதையின் கருதான் மேலே நான் குறிப்பிட்டு இருப்பது. அதை எழுதியவர் சாட்சாத் சுஜாதா அவர்கள்தான்.

சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "என் இனிய இயந்தரா" மூலம் நமது கிராமப்புறங்களில் கூட கம்ப்யூட்டர், ரோபோ போன்ற வார்த்தைகளை கொண்டு சேர்த்தார் சுஜாதா. அதில் வரும், ஜீனோ என்கிற ரோபோ நாய்க்குட்டி பல சிறுவர்களின் மனசுக்குள் குடிகொண்டதை மறக்க இயலுமா??

சைவ தமிழ்,சமய தமிழ் என்பது போல விஞ்ஞான தமிழ் என்று ஒரு புதிய பரிணாமத்தை தனது எழுத்துக்களால் கொண்டுவந்தவர் சுஜாதா.

என்னை போன்ற சாமான்யருக்கு எல்லாம் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையே அவரது கதைகளால் அல்லவா பரிச்சயம் ஆனது?

கமலுடன் விக்ரம், மணிரத்னத்துடன் ரோஜா, உயிரே,கன்னத்தில் முத்தமிட்டால் என்று சுஜாதாவின் பங்களிப்பை சொன்னாலும், இயக்குனர் ஷங்கரின் வளர்ச்சியில் ஒரு பெரும் பங்கை வகித்து இருக்கிறார் சுஜாதா.

"மூன்று முறை நாங்கள் இந்த கதை பற்றி விவாதித்து இருக்கிறோம்.அவர் மறையும் முன்பாகவே ஸ்கிரிப்ட் முழுவதும் தயாராகிவிட்டது" என்று "எந்திரன்" உருவான விதம் பற்றி ஒரு பேட்டியில் சொன்னார் இயக்குனர் ஷங்கர்.

சுஜாதாவின் எழுத்துக்களில் இருந்த பரிச்சயமே ஷங்கர் இன்று இந்தியாவின் ஹைடெக் இயக்குனர் என்று உருவாக ஒரு காரணம்.

இந்தியன் படத்தின் இறுதிகாட்சி. லஞ்சம் வாங்கியதற்காக தனது சொந்த மகனையே கொள்ள துடிக்கிறார் இந்தியன் கமல்.

"அவனுக்காக மீசையை இழக்க துணிந்த சேனாதிபதி இன்னைக்கு அவனையே இழக்க தயாராகிட்டான்" என்று கமல் சொல்லும்போது, "புத்திக்கு தெரியுது.ஆனா, மனசுக்கு தெரியலையே" என்று சுகன்யா அவரை தடுக்கிறார். அப்போது கமல் சொல்லும் பதில், "எனக்கு புத்தி,மனசு எல்லாம் ஒண்ணுதான்".

மிகசுருக்கமான வசனங்களில் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்திவிடுவதில் சுஜாதாவுக்கு நிகர் அவரே.

"என் இனிய இயந்திரா" நாவலில் வரும் ஹோலோக்ராம் என்கிற கான்செப்ட்டைதான் தனது "ஜீன்ஸ்" படத்தில் வரும் "கண்ணோடு காண்பதெல்லாம்" பாடலின் கான்செப்டாக பயன்படுத்தினார் ஷங்கர். ஒரு எந்திரத்தால் உருவாக்கப்பட்ட நிழல் உருவம் நாட்டையே ஆட்சி செய்வதாக வரும் இந்த நாவலே "எந்திரன்" கதை உருவாக காரணமாக இருந்திருக்கலாம்.

"முதல்வன்" படத்தில் பஸ் ஊழியர் - மாணவர்கள் மோதல்,அதை தொடர்ந்து வரும் ட்ராபிக் ஜாம் காட்சிகள் இவை அனைத்தையும் சுஜாதா அவர்கள் முதலில் சிறுகதையாக எழுதிகொடுக்க, பின்புதான் அதை படமாக்கினார் ஷங்கர். முதல்வர் ரகுவரனை, அர்ஜுன் பேட்டிகாணும் படத்தின் ஹைலைட் காட்சிக்கு சுஜாதாவை விட வேறு யாரும் இத்தனை சிறப்பாக எழுதமுடியுமா?

பாய்ஸ் மற்றும் அந்நியன் போன்ற ஷங்கரின் ஏனைய படங்களிலும் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம். "சிவாஜி"யில் ரஜினிகாந்துக்கு ஏற்றார்போல, "பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல" போன்ற வசனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கும் பேசப்படுபவை.

"நாங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்யும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான விஷுவல்தன்மையை, மிக சாதாரணமாக தனது எழுத்துக்களில் கொண்டுவந்து விடுகிறார் சுஜாதா" என்கிறார் ஷங்கர்.

கமல்ஹாசன் தனது முதல் இயக்கத்தில் வெளிவந்த "ஹே ராம்" படத்தை,அந்த தருணத்தில் மறைந்த திரு.அனந்து அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்.

அதுபோலவே, தமிழின் முதல் விஞ்ஞான கதைகளின் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவர் முக்கிய பங்களிப்பு செய்து இருக்கும், விஞ்ஞான படமான "எந்திரன்" அவருக்கு சமர்ப்பிக்க படவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்து இயக்குனர் ஷங்கருக்கு, சுஜாதா வாசகர்கள் சார்பாக ஒரு கடிதம் எழுதினேன்.

ஆனால், தமிழர் பிரச்சினை குறித்து கருணாநிதி டெல்லிக்கு எழுதிய கடிதம் போல ஆகிவிட்டது இக்கடிதமும்.

முடிந்தவரை பயன்படுத்திவிட்டு பின்னர் தூக்கி எறிவதானே சினிமாக்காரர்களின் வழக்கமான பாணி?.

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும், அந்த வருடம் வெளிவந்த சிறந்த புத்தகங்களை நமக்கு அறிமுகம் செய்வார் சுஜாதா.

அந்த மிக சிறந்த பணியை, அமரர் சுஜாதாவின் பெயரால், தற்போது செய்துவருகிறார் 'உயிர்மை' மனுஷ்யபுத்திரன்.

ஆனால், உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து வருடம்தோறும் "சுஜாதா விருதுகள்" என்று வழங்கி வருகிறார்கள்.

தமிழின் நவீனத்துவத்திற்குப் பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.

ஒவ்வொரு வருடத்திலும் வெளிவரும் சிறந்த சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு, கட்டுரை தொகுப்பு, சிறந்த சிறு பத்திரிக்கை இவற்றோடு..இந்த வருடம் முதல் "சிறந்த வலைப்பதிவு" என்று அவரது பிறந்த நாளான மே 3 அன்று விருது வழங்கபோகிறார்கள்.

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தேர்வுகுழுவை அமைத்து உள்ளார்கள்.

2011 வருடம் சுஜாதா விருதுகள் - தேர்வு முடிவுகள்




சிறுகதை பிரிவு :
விருது பெறுபவர் : வண்ணதாசன்.
நூல் : ஒளியிலே தெரிவது.
தேர்வு குழு : இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார இந்திரஜித்

நாவல் பிரிவு:
விருது பெறுபவர் : ஜோ டி குருஸ்
நூல் : கொற்கை
தேர்வு குழு : சுப்ரபாரதி மணியன், இமையம், பாரதி கிருஷ்ணகுமார்

கட்டுரை பிரிவு:
விருது பெறுபவர் : அழகிய பெரியவன்
நூல் : பெருகும் வேட்கை
தேர்வு குழு : அ.ராமசாமி, ந. முருகேச பாண்டியன், மணா

கவிதை பிரிவு:
விருது பெறுபவர் : ஸ்ரீநேசன்.
நூல் : ஏரிக்கரையில் வசிப்பவன்
தேர்வு குழு : ஞானக்கூத்தன், சுகுமாரன், தமிழச்சி தங்கபாண்டியன்

சிற்றிதழ் பிரிவு:
விருது பெறுபவர் : மு.அரிகிருஷ்ணன்
நூல் : மணல் வீடு.
தேர்வு குழு : சு. தியடோர் பாஸ்கரன், தமிழவன், கழனியூரான்

இணைய பிரிவு :
விருது பெறுபவர் : யுவகிருஷ்ணா.
இணையம் : www.luckylookonline.com
தேர்வு குழு : சாரு நிவேதிதா,ஷாஜி,தமிழ்மகன்.

இந்த சேவையை தொடர்ந்து கொண்டு, அமரர் சுஜாதாவின் நினைவுகளை பேணிக்காத்து வரும் "உயிர்மை" மனுஷ்யப்புத்திரன் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றிகள் பல. சுஜாதா விருது பெற்ற அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.

-இன்பா

Thursday, April 28, 2011

நீராடும் இளம் பெண்கள் - ஒரு இலக்கிய பார்வை



ஆறு, குளம், கடல் இவற்றில் குளிப்பது மக்களிடத்தில் இருந்து வரும் வழக்கம். இந்த மூன்றில் கடலில் குளிப்பது தூய்மைக்காக அல்ல. புறத் தூய்மை நீரால் அமையும் என்பது ஒரு பழைய வாக்கு. அகத் தூய்மை என்பதும் ஒன்றுண்டு. குளியல் இரண்டு தூய்மைக்கும் பொதுவானதுதான். கடலில் குளிப்பது சமயச் சார்பான சடங்கை நிறைவேற்ற. ஆற்றில் குளிப்பது அகப்புறத் தூய்மை இரண்டுக்குமாக. பெரியஅளவில் நாட்டில் கோயில்கள் அமைந்த பிறகு திருக் குளம் என்று பெயரிடப்பட்ட குளங்களும் மக்களின் அகப்புறத்தூய்மைக்குத் தேவையான நீர்நிலைகளாயின. சுனைகள், ஓடைகள் மற்றும் அருவிகள் இவற்றிலேயும் மக்கள் குளித்தார்கள்.

தமிழ்நாட்டின் பெரிய ஆறுகளான வைகையும் காவிரியும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. குளித்தல் என்பது மகிழ்ச்சியான செயல்தான். ஆண் குளித்தால் பெண்ணுக்கும் பெண் குளித்தால் ஆணுக்கும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியான செயலாகத்தான் இலக்கியம் குளிப்பதைக் கணித்து இருக்கிறது. ஏன்? இருபாலரது உடல்களும் நிர்ப்பந்தம் இல்லாமல் பார் வைக்குக் கிடைக்கிறது. ஒரு நீர்நிலையை தனக்குள்ள ஆதிக்கத்தைக் காட்டுவதற்குத்தான் மனிதன் குளியலைக் கண்டுபிடித்தான் போலும். தன் உடலை முழுமையாகத் தண்ணீரில் மனிதன் அமிழ்த்திக் கொள்கிறான். தண்ணீரோடு ஆழ்ந்த தொடர்பு கொள்ளும் அந்த உடம்பு பாராட்டுப் பெறுகிறது. இதற்கு எதிரான குளிப்பு தீக்குளிப்பு.

தமிழிலக்கியம் பரிபாடல் என்ற ஒரு தொகுப்பைப் பெற்றுள்ளது. நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழ வந்ததைக் கூறுகிறது பரிபாடல் . புனல் விளையாட்டு என்று குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பரிபாடல்தான் முதலில் இலக்கியத்தில் பதிவு செய்கிறது. அடுத்துவந்த நூல்களை சீவக சிந்தாமணி, கம்ப இராமாயணம் முதலியவற்றிலும் இந்தப் புனல் விளையாட்டு கொண்டாடப்படுகிறது. வடமொழியிலும் புனல் விளையாட்டு என்பது ஜலக்கிரீடை என்று பெயர் பெற்றுள்ளது:

பரி பாடல், வைகை நதியில் மக்கள் புதுவெள்ளத்தில் கொட்டம் அடிப்பதைக் காட்டுகிறது. மக்களுக்குப் புனல் விளையாட்டின்போது மான அவமானம், கூச்சம் போன்ற பிரச்சினைகள் எழுவதில்லை. இல்வாழ்க்கைக்கு வெளியே உள்ளதாகக் கூறப்பட்ட பரத்தையர்களின் நடத்தை பற்றியும் பரிபாடல் குறிப்பிட்டிருக்கிறது.

பரத்தையர்களின் நடத்தை பற்றிக் குறிப்பிடும்போது பரிபாடல் புறநூல்களில் ஒருவரான நல்லழிசியார் தயக்கம் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். வைகையின் கரை புதுவெள்ளம் நிறைந்தபோது இருந்த நிலையை நாடக அரங்குபோல் இருந்தது என்கிறார் நல்லழிசியார். நாடக அரங்கு என்றதால் சொல்லப்பட்ட விஷயம் நாடக வழக்கு சம்பந்தப்பட்டது என்று பொருளில்லை. ஆனால் ஓர்அசாதாரணத் தன்மையை, இந்த நிகழ்வு குறிக்கவே செய்கிறது. அரங்கு-நிகழ்வின் வெளி-நாடகத்தை நினைவூட்டுகிறதே தவிர, சொல்லப்பட்ட நிகழ்வு அல்ல. ஆனால் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் என்ற அர்த்தமும் இந்த நாடகம் என்ற சொல்லாட்சியில் தொக்கி நிற்கவே செய்கிறது.

கவிதையில் அர்த்தம் உத்தேசிக்கப்பட்டதும் உத்தேசிக்கப்படாததுமாகத் தானே அமைகிறது.

நல்லழிசியார் வைகையைப் பற்றிய பரிபாடலில் (16 ஆம் பாட்டு) குறிப்பிடும் நிகழ்ச்சி இது.

பரத்தையின் தோழிகள் மூங்கில் குழாய் மூலமாக அரக்கு நிறத்தில் உள்ள தண்ணீரைக் காதல் பரத்தை மேல் பீச்சினார்கள். அவளுடைய குரும்பைப் போன்ற முலையில் அந்த செந்நீர் தங்கி இருக்க, அவள் அதைத் துடைக்காமல் இருந்தாள். அப்போது தலைவன் அங்கே வருவதைப் பார்த்த அவளது தோழிகள் ‘அவளைச் சேராதே. அவள் பூத்திருக்கிறாள்’ என்றார்கள். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தலைவனுக்குத் தெரியும். அது செஞ்சாந்தின் குழம்பு என்பதும் அவன் அறிவான். உடனே வீட்டுக்குப் போய்த் திரும்பி வந்து அவளது குருதி பொறும் பூ நீரைத் துடைத்து மருவினான். இவள் பூத்தனள் என்று அவன் சொல்ல, அவள் நாணினாள். (பரிபாடல் 16-வரி 20-30)

இந்தப் பாட்டின் கடைசியில் பரத்தை வெட்கப்பட்டாள் என்று தோழி கூறுகிறாள். பரத்தை வெட்கப்பட்டது தலைவன் செய்த கேலிக்காகத்தானே தவிர, தோழிகள் சொன்னதற்கோ அல்லது பூப்பு பற்றிய செய்திக்கோ இல்லை. வைகை ஆற்றின் புது வெள்ளம், மூங்கில் குழாய்களால் பெண்கள் பீய்ச்சும் செந்நிறத் தண்ணீர்; செஞ்சாந்துக் குழம்பு- அதாவது திரவ நிலை- ஆக மூன்றும் சேர்ந்து ஒரு நீர்மையைக் கூச்ச நாச்சமின்றி பாடலில் நிலைநாட்டுகின்றன. ஆனால் இந்தத் தலைவனை அவனது முறையான மனைவி ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். தடையற்றதும் தடை உடையதுமாக இரண்டு விஷயங்களை வைத்து நல்லழிசியார் இப்பாட்டை அமைக்கிறார். பரத்தையின் நடத்தையையும், தலைவன் நடத்தையையும் தலைவி நிராகரிப்பதன் மூலம் ‘பொதுக்குளியல்’ பற்றி ஒரு கருத்துக்கு அழிவிலார் பரிபாடல் வித்திடுகிறது. ஆனால் பெண் தான் குளிக்கப்போகும் நிலையில் இருக்கும்போது ஆணால் பார்க்கப்படுகிறோம் என்ற பயத்தை அனுபவிக்கவில்லை. பரத்தை என்பதால் அப்படி ஒரு மனநிலை உடையவள் என்று சொல்லி விட முடியுமா?

பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது. அழகிய சிறிய நூலான திருப்பாவையில் ஆண்டாள் பழைய நீராடல் ஒன்றைப் புதுப்பிக்கிறாள். ஆனால் ஆண்டாளின் நீராடலில் ரகசியம் நுழைகிறது. பாதுகாப்பற்ற உணர்வும் எழுப்பப்படுகிறது. பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடைபெறுகிறது. பரிபாடலில் குளியல் ஒரு புனல் விளையாட்டு.



ஆண்டாளின் நீராடல் ஒரு நோன்பு. பரிபாடலில் தோழிகள் பொய் சொல்கிறார்கள். அது கண்டனத்துக்குரியதாக காட்டப்படவில்லை. ஆனால் ஆண்டாளின் நீராடல் பொய் சொன்ன பாவம் நீங்கவும் பயன்படுகிறது. பரிபாடலின் தோழியர்கள் பரத்தையின் சகவாசிகள். ஆண்டாளின் தோழிகள் பக்தைகள், நீராடல் பற்றி ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைக் காட்டிலும் அவர் இயற்றிய ‘கண்ணனிடம் புடவைகளைத் திரும்பக் கேட்டல்’ என்பது பற்றிய பாசுரங்கள்தாம் நம்மைக் கவர்கின்றன ஆண்டாளின் பாட்டு.

கோழி அழைப்பதன் முன்னம்
குடைந்து நீராடுவான் போந்தோம்

என்று தொடங்குகிறது. முதல் அடியே பெண்கள் குளிக்கப்போகும் நேரத்தைக் குறிப்பிடுகிறது. கோழி கூவும்முன்- அதாவது இன்னும் இருள் பிரியாத நேரம். ஆண்டாளின் ‘கோபிகைகள்’ தாமரைப் பொய்கைக்குப் போகிறார்கள். அது அவர்களுடைய ஊருக்குக்குத் தொலைவில்தான் இருக்கிறது. ‘கங்குல் கனைசுடர் கால் கீயாடுன்’ என்று இளங்கோவடிகள் வருணித்த ஒரு பொழுதில் புறப்பட்டுப் போய் நன்றாகப் புலர்வதற்கு முன் ஊருக்குத் திரும்பிவிட வேண்டும் என்று திட்டமிட்டுத்தான் கோபிகையும் அவளது தோழிகளும் புறப்படுகிறார்கள். இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட பாதுகாப்பின்மையை உணர்த்துகிறது.

கோபிகை பயந்தது போலவே இவளுக்கு முன்பாக அங்கே கண்ணன் போய்விட்டான். தங்கள் சேலைகளைக் கழற்றி வைத்துவிட்டுத் தண்ணீரில் குளித்துத் துறையேறிய பின்புதான் கோபிகைகள் தங்களது சேலைகள் காணாமல் போய்விட்டதைத் தெரிந்து கொள்கிறார்கள். அந்தச் சேலைகளைக் குருந்த மரத்துக் கிளைகளில் மறைத்து விட்டுக் கண்ணனும் அங்கே இருக்கிறான் என்பதையும் கோபிகையர்கள் தெரிந்து கொள்கிறார்கள். கண்ணனிடம் சேலைகளைத் தந்துவிடச் சொல்லிக் கெஞ்சும் கோபிகையின் கூற்றில் சில வதந்திகளை ஆண்டாள் கூறுகிறார். பொய்கை ஆணுக்கே உரியது போன்ற நிலைமை உள்ளதை இந்த வதந்தி சொல்கிறது.

‘இனி என்றும் பொய்கைக்கு வாரோம்’ என்கிறாள் கோபிகை. தோழியும் நானும் வாரோம் என்று வாக்குறுதி செய்கிறாள். இனி வரமாட்டோம் என்பதால் வந்தது தவறென்று ஒப்புக்கொள்கிறாள். இப்பொய் கைக்கு எவ்வாறு வந்தாய் என்று கேட்கிறாள். என்னுடைய தாய் முதலியவர்கள் எங்களை இப்படிக் கண்டால் தாங்க மாட்டார்கள் என்கிறாள். ‘நீ கேட்டதையெல்லாம் தருவோம்’ என்று சொல்கிறாள். ‘யார் கண்ணிலும் படாமல் போய்விடுகிறோம்’ என்கிறாள். ஒரு கட்டத்தில் கண்ணனைக் ‘குரங்கு’ என்றும் திட்டுகிறாள். மகிமை இல்லாதவன் என்றும் திட்டுகிறாள்.

கோபிகையர் கெஞ்சுதல்களின் இடையே ‘நீ வேண்டியதெல்லாம் தருவோம்’ என்னும் வாக்கு திடுக்கிட வைக்கிறது. ஆணுக்கே உரிமை உடையது போன்ற நீர்நிலையில் அவனது அனுமதியில்லாமல் பெண் இதைப் பயன்படுத்தக்கூடாது என்பது போல் ஆண்டாள் பாசுரத்தில் தொனிக்கிறது. எனவே பெண் ஆணுக்குத் தெரியாமல் குளிக்க வேண்டியுள்ளது போலும். பெண்ணின் குளியல் ஒரு கள்ளக்குளியல். எனவே பயப்படுகிறாள். இதை மறைக்கும் முயற்சியாகப் பெண் தன் குளியலைப் பிறர் பார்த்தால் தன் மானம் போய்விடும் என்ற குரலை எழுப்புகிறாள். பெண் ஏற்படுத்திக்கொண்ட சிக்கலை விடுவிக்க முடியவில்லை. அவள் மானமும் கள்ளத்தின் வெளிப்பாடும் கலந்துவிட்டன.

பரக்க விழித்து எங்கும் நோக்கிப்
பலர்குடைந்தாடும் சுனையில்

என்கிறாள் கோபிகை. இந்த வரிகளில் ஆண்டாள் ஒரு பொருள் மயக்கத்தை அல்லது தெளிவின்மையை ஒரு யுக்தியாகச் செய்கிறார் என்று தோன்றுகிறது. ‘பலர்’ என்பதற்குப் பல ஸ்திரீகள் என்று வைணவ உரையாசிரியரான பெரியவாச்சான் பிள்ளை உரை எழுதியிருக்கிறார். பலரோடு வந்ததால் கோபிகை பலர் என்று குறிப்பிட்டது தோழிகளைத்தான். எனவே பலர் எனப்பட்டவர் பெண்கள்தான் என்பது தெளிவாகிறது. ஆனால் ‘பலர்’ என்ற பன்மை ஒரு நொடியில் பால்பாகுபாட்டை விட்டுவிட்டு ஆண்களையும் காட்டி மறைகிறது. முன்னமே கண்ணன் என்ற ஆணால் பார்க்கப்பட்டு விட்டார்கள் அல்லவா? ஒரு ஆணாலும் பார்க்கப்படாத பெண் ஒரு ஆணால் பார்க்கப்பட்டாலும் பார்க்கப்பட்டிராமை என்ற நிலையிலிருந்து விலக்கப்பட்டவள் தானே! இதற்கு அடுத்து இந்த வரியில் இடம்பெறும் ‘சுனை’ என்ற சொல்.

‘சுனை’ என்ற சொல்லைக் கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருவது குன்றுகளில் காணப்படும் நீர்நிலைதான். ஆனால் இங்கே ஆண்டாள் கோபிகை குளிக்க வந்த தாமரைப் பொய்கையை சுனை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். ஆண்டாள் காலத்தில் சுனை இந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டது போலும். ஆனால் பெரியவாச்சான் பிள்ளை ஒரு விஷயத்தை சுனை பற்றிக் குறிப்பிடுகிறார். ‘தமிழர் கலவியை சுனையாடல் என்று பேரிட்டுப் போருவார்கள் என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. இந்தப் பொருளை இந்தப் பாடலின்போது நினைவு கூரவில்லை. அர்த்தப்படுவதும் அப்படி ஒரு விபத்து ஏற்படுவதைக் கவிதை காட்டுகிறது. நீராடல் விஷயமாக ஆண்டாள் இந்தக் கவிதையில் எடுத்துக் காட்டியிருக்கும் பயம் நியாயமானது. தண்ணீரில் மூழ்கிவிட்ட பெண்ணுக்கு எப்படிப்பட்ட முதலுதவியை ஆண்கள் செய்கிறார்கள் என்பதைத் தமிழ்த் திரைப்படங்கள் காட்டுவதும் இங்கு நினைவுக்கு வருகிறது.



ஆண்டாள் பாடலில் சுட்டிக்காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது.

‘இதற்கு முன்பும் இதற்குப் பின்பும்’ என்ற மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பில் ‘பிரக்ஞை’ என்ற கவிதை திணை இலக்கியம், பக்தி இலக்கியத்தைத் தொடர்ந்து, குளிக்கும் பெண்ணையும் பற்றி எழுதுகிறது. கவிதைக்கு ‘பிரக்ஞை’ என்ற தலைப்பு தவிர்க்க முடியாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். முன்னே சொன்ன பரிபாடல், ஆண்டாள் பாடல் இரண்டிலும் விழிப்புணர்வு இருக்கிறது. மனுஷ்ய புத்திரன் கவிதையில் விழிப்புணர்வுக்குப் பிரக்ஞை என்று பெயர். பரிபாடல் கவிதையில் நாடகம் நினைவுகூரப்படுவதால் ஆசைக் கனவாகவும் கொள்ளலாம். ஆண்டாள் கவிதையில் கனவுப் பண்பு இல்லையென்றாலும் அந்தக் கோபிகையின் மனம் பயத்தில் பிறழ்கிறது என்பதை அவளது நினைவு கூரலைக் கொண்டு சொல்லலாம். மனுஷ்ய புத்திரன் கவிதையில் இறுதியில் துர்க்கனவு வெளியிடப்படுகிறது.

இரவெல்லாம்
துர்க்கனவு கண்டு விழித்தெழுகிறாள்
மனம் பிறழ்ந்த நங்கையொருத்தி

என்று கவிதையின் இறுதி வரிகள் சொல்லும்போது கதை கண்டவளின் பதற்றத்தை வாசகன் உணர முடிகிறது.

பாதுகாப்பான வீடுகளின்
தாழிடப்பட்ட குளியலறை
சாவித் துவாரங்களில்
தன்னை உற்றுநோக்கும்
கண்களைப் பற்றி
இரவெல்லாம்
துர்க்கனவு கண்டு விழித்தெழுகிறாள்
மனம் பிறழ்ந்த நங்கையொருத்தி

உற்றுப் பார்ப்பவனின் கண்கள்; அவற்றைத் தன்னுடைய கனவில் கண்டு விழித்தெழுந்த கண்கள் இவற்றை இக்கவிதை படம்பிடிக்கிறது. ஆண்டாளின் கவிதையில் வரும் கோபிகை ஒரு அசம்பாவிதத்தைக் கற்பனையாக எதிர்பார்த்துப் பயப்படுகிறாள். இதைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பு மொழியால் சொல்கிறார். தமிழர் கலவியை சுனையாடல் என்று பெயரிடுவார்கள் என்னும் அவரது தகவல் இந்த அசம்பாவிதக் கற்பனையைக் கிளறுகிறது. பரிபாடல், ஆண்டாள் கவிதைகளில் பெண்கள் இரு வகைப்பட்டவராகின்றனர். பரிபாடலின் பரத்தையை ஆண்டாள் கவிதையும் மனுஷ்ய புத்திரன் கவிதையும் விலக்கிவிடுகிறது. பரிபாடலிலேயே அதன் முற் பகுதியில் கனவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில் வரும் பெண்ணையே ஆண்டாள் தன் கவிதையில் உருவாக்குகிறாள்.

ஆண்டாள் கவிதையில் குடும்பம், அந்தக் குடும்பம் பின்பற்றும் சம்பிரதாயம், கடவுள், அதன் புராணம் எல்லாம் பேசப்படுகின்றன. மனுஷ்ய புத்திரன் கவிதையிலும் குடும்பம்தான் களமாக இருக்கிறது. ஆனால் அது துர்ப்பாக்கியமாக அமைந்துள்ளது. ஆண்டாளின் கவிதையில் வீட்டுக்கு வெளியே நடக்குமென பயந்த ஒன்று மனுஷ்ய புத்திரன் கவிதையில் வீட்டுக்குள்ளேயே நடக்கிறது. இந்தக் கவிதையின் இரண்டாம் பகுதியை ஒரு நிதானமான வாசிப்புக்கு உட்படுத்தினால் வாசகனின் மனம் குழம்பக் கூடும்.

குளியலறையைக் குறிப்பிடும்போது அது பூட்டப்படும் வசதி உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சாவித்துவாரம் உள்ள கதவு. எனவே குளியலறை கூட ஒரு வகையான சிறைதான். உள்ளே, வெளியே தாழ்ப்பாள் இருந்தால் போதாதோ? மனுஷ்ய புத்திரனின் ‘பிரக்ஞை’ கவிதை நவீன காலத்தது. நவீன காலத்தில்தான் வீடுகளுக்குக் குளியலறை என்பது உருவாக்கப்படுகிறது. கூடம், தாழ்வாரம், முற்றம், பூசை அறை, சமையல் அறை, பாடசாலை (படிக்கும் இடம்) உண்டே தவிர, படுக்கை அறை, குளியலறை என்பவை நவீன காலத்து உருவாக்கங்கள். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வீட்டின் அறைகளில் ஒன்றைக் காமிரா அறை என்றார்கள். இது பிரெஞ்சு மொழியில் தோழமையைக் குறிக்கும் ‘காம்ரேட்’ என்ற சொல்லில் உருவாகி நண்பர்கள் சந்திக்கும் அறையைக் குறித்ததாம். கிணற்றடியில் பெண்கள் குளிக்கும் வீடுகளைத்தான் பாரதியாரும் அறிந்திருப்பார். ‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும்’ என்று எழுதும்போது பாரதியார் பூட்டும் வசதியுள்ள குளியலறை வீடுகளை அறிந்திருக்க மாட்டார். படுக்கை அறைகளின் எண்ணக்கை கொண்டு வீட்டைக் கணிப்பதும் நவீன காலத்து முறைதானே

மனுஷ்ய புத்திரனின் ‘பிரக்ஞை’ கவிதை நவீன காலத்துக் கவிதையின் குறியீடுகளைக் கொண்டுள்ளது. பிரக்ஞை என்ற சொல்லே 1970க்குப் பிறகு பொருட் செறிவுடன் உலா தொடங்கிய சொல்லாகும். ‘மனப் பிறழ்வு’ என்ற பெயரிடுகையும் நவீன காலத்தை உணர்த்துவதே. இக்கவிதையின் முதல் பகுதியும் அப்படியே. நவீனமான ஒன்றை நவீனம், நவீனம் என்று பரபரப்பாகப் பேசாமல் இயல்பாக்கிக் கொண்டு இயல்பாகப் பேசுவது நவீன கவிதை இயலில் ஒரு கூறு. ‘பிரக்ஞை’ கவிதையில் மனுஷ்ய புத்திரனிடம் இப்பண்பு காணப்படுகிறது. கவிதையின் முதல் பகுதி இது.

நதிகள்
குளங்கள்
ஓடைகளோரப் பயணங்களில்
நூறு நூறு
கண்பட்டு விலகும்
குளிக்கும் கோபியர்களின்
ஈர உடல்கள்
அச்சமற்று கூச்சமற்று
வெட்டவெளிகளில்
சுடர்ந்து கடக்கின்றன

குளிக்கும் கோபியர்கள்! குளிக்கும் பெண்கள் கோபியர்களாகி விடுகிறார்கள். கோபியர்களைக் குளிக்கும் பெண்களாக மட்டுமே காட்டப்பட்டது தமிழ்நாட்டில்தான். வேறொரு நவீன கவிஞரின் கவிதைத் தொகுப்பின் பெயர் ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’. குளத்திலேயே அவர்கள் இருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரனின் கவிதையும் கோபியர்களை நினைவு கூர்கிறது. அவர்களது ‘ஈர உடல்கள் அச்சமற்று கூச்சமற்று’ உள்ளன என்கிறது கவிதை. இந்த ஈர உடல்கள் நதிகள், குளங்கள், ஓடைகளோரப் பயணங்களில் தென்படுகின்றன. ‘ஓடைகளோரப் பயணங்களில்’ என்ற அமைப்பு உரைநடையை விலக்கிக்கொண்டு கவிதை நடையில் சிக்கனப்பட்டிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.

இப்பகுதியில் அச்சம், கூச்சம் இரண்டையும் இணைத்திருப்பது கவனிப்புக்குரியது. அச்சம், நாணம் இரண்டும் பெண்ணியல்புகளாகப் பேசப்பட்டு வருகின்றன. அச்சம் இல்லாத சமயத்திலும் கூச்சம் இருக்கும் அல்லவா. மறுபடியும் பரிபாடல் பக்கம் போகலாம். இந்தப் பரிபாடல் நல்லழிசியாரால் எழுதப்பட்டது. இதுவும் வைகையில் புனலாடல் பற்றிதான்.

நீர்த்துறையில் வரிசையாக நின்றவர்களுடைய மொழிகள் ஒன்றை உணர்ந்து ஒவ்வாமற் பலவாக ஒரே காலத்தில் எழுந்தன. புல்லாங்குழலின் இசை எழ முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுனி ஆகிய இவற்றின் தாளத்தை ஆடல் மகளிர் தன் கையால் அளந்து நிற்ப உண்டாகும் ஓசையே அங்ஙனம் கேளாமைக்குக் காரணம். ஆயினும் யாம் கேட்டன சில:

‘பலர் கூடியிருக்கிற இடத்திலே நின்று
அப்பூங்கொம்பு போன்றவருடைய நகங்களை
ஒருவன் நோக்கினான். அவன் இளநெஞ்சன்.
திண்மை அற்றவன் என்றார் சிலர்’

‘அவன் இப்பெண் பூண்ட முத்துமாலையின்
அழகைப் பார்த்து இதற்குப் பொருத்த
மாயிருக்கின்றன இவள் நகங்கள் என்று
அவற்றைப் பார்த்தான். இதற்கு அவள்
நாணமடையவில்லை’ என்றனர் சிலர்.



இந்தப் பகுதியில் உடல் திறக்க பெண் இருப்பதும், அந்த உடல் பார்க்கப்படும்போது பயமும் வெட்கமும் இல்லாதிருப்பதும் கண்டிக்கப்படுகிறது. சமுதாய விதிகளுக்கு வெளியே வைக்கப்பட்ட மக்களின் பண்பாடு வேறாகக் காட்டப்படுகிறது. ஆனால் அவர்கள் நீராடலில் ஒரே துறையில் எதிர்ப்படுகிறார்கள். பயப்படாதவர்கள், வெட்கப்படாதவர்கள் என்பதை நினைவில் கொண்டு மனுஷ்ய புத்திரனின் பிரக்ஞை கவிதையில்

குளிக்கும் கோபியர்களின்
ஈர உடல்கள்
அச்சமற்று கூச்சமுற்று

இருப்பதை ஆராய்ந்தால் இவர்கள் குலப் பெண்கள்தாம் என்பதும் ‘பொதுமகளிர்’ அல்லர் என்பதும் தெரியவருகிறது. ஏனெனில் அவர்கள் கோபிகையர்கள் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். இது கவசம்போல் அமைகிறது. ஆண்டாள் பாட்டில் கோபிகையர்களுக்கு இருந்த பயம் கூட அவர்களிடம் இல்லை. இவர்கள் குளிக்கும்போது இவர்களைப் பார்க்கும் ‘நூறுநூறு கண்களில்’ இவர்கள் எவ்வளவு விரைவாக மறைந்து விடுவார்களோ அவ்வளவு விரைவாக அவர்களது நிர்வாண பிம்பமும் மாறாது விடுகிறது. அவர்களை யாரும் உண்மையில் பார்க்கவில்லை. பயமில்லை. வெட்கமில்லை.

பரிபாடல் கவிதையிலும், ஆண்டாள் கவிதையிலும், மனுஷ்ய புத்திரன் கவிதையிலும் புராணம் இடம்பெறுகிறது. முன் இரண்டு பேர் கவிதைகளில் பெண் திறந்த வெளியில் குளிக்கிறாள். மனுஷ்ய புத்திரன் கவிதையின் முதல் பகுதியில் பெண் திறந்த வெளியில் குளிக்கிறாள். இரண்டாம் பகுதியில் பெண் வீட்டில்தான் குளிக்கிறாள். வீட்டுக் குளியலிலும் பெண்ணுக்குப் பாதுகாப்பில்லை என்ற செய்தியை மனுஷ்ய புத்திரன் கவிதை பதிவு செய்கிறது. மனுஷ்ய புத்திரனின் மற்றொரு கவிதையான ‘யாரோ கவனிக்கும் போதில்’ மீண்டும் மனப் பிறழ்வு கொண்ட மங்கையைப் பார்க்கிறோம்.

மனப் பிறழ்வு கொண்ட ஒருத்தி
எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்

பிரக்ஞையில் சொல்லப்பட்ட பெண் ‘மங்கை’ என்று சுட்டப்பட்டாள். இங்கே அவள் வெறுமனே ஒருத்திதான். இவள் எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள். இவள் நிலைமை மோசமாகி விட்டிருக்கிறது. நூறு நூறு கண்களால் இல்லாத பயம் இரண்டே கண்களில் ஏற்படும் என்பதை அவள் அறிந்துகொண்டுவிட்டாள்.

பழைய தமிழ்நாடு, இடைக்காலத் தமிழ் நாடு, நவீனகால தமிழ்நாடு ஆகிய மூன்றிலும் ஒரு பெண் உடம்பு தோற்றப்படுவதைப் பார்த்தோம்.



குறிப்புகள்

1. பழங்காலத்தில் நீர் நிலைக்குக் காவல் போடப்பட்டிருந்தது கரை காவலர்கள் அடிக்கும் பறையின் ஓசையைப் பரி பாடல் குறிப்பிடுகிறது. ஒரு நீர் நிலைக்குக் காவலனாக ஒரு யட்சன் இருந்ததை மகாபாரதம் சொல்கிறது. குளிக்கவும் குடிக்கவும் விலங்குகளைக் கழுவவும் தனித்தனி நீர்நிலைகள் இருந்தன. பெண்கள் எதற்காகக் குளிக்கிறார்கள் என்பது கண்காணிக்கப்படாவிட்டாலும், அவர்களது மனசாட்சிக்கு விடப்பட்டது.

2. நீர்நிலைகளில் யதார்த்தமாகக் கண்ணில்படும் பெண் உடல்களை வெறிப்பவர்களை ‘ஓட்டை மனதினர்’ என்கிறது பரிபாடல்.

கோட்டியு கொம்பர்
குவிமுலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரமிலி.

3. ஆண்டாளின் கன்னிமார் நீராடல் பற்றிய பாசுரங்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை எழுதியுள்ள உரை கவிதைக்குப் பொருள் கொள்ளும் முறையொன்றைக் காட்டுகிறது.

4. ஆண்டாளின் கோபிகைகள் கன்னிப் பெண்கள். பரிபாடல், மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் பெண்கள் பற்றி விவரம் சொல்ல முடியவில்லை. மூன்று கவிதைகளும் தங்கள் தங்கள் வகையில் ஓவியம் வரைகின்றன. ‘பெண்கள் பால் வைத்த நேயம்’ கம்பரின் வாக்கு. ‘பிழைப்பரோ சிறியர் பெற்றால்’ என்பவை மற்ற சீர்கள்.

5. குளியல் பெண்களின் பரிபாஷையில் கர்ப்பம் தரிப்பதைக் குறிப்பிடுகிறது.


(கட்டுரை : கவிஞர் ஞானக்கூத்தன், உயிர்மை பதிப்பகம்)

(Oil Paintings : Sri Ravi Varma)

Wednesday, April 27, 2011

"அப்பா சொன்னாரென" ஊழலும் செய்தீர்களா?



" கனிமொழியை எதிரியாகச் சேர்த்ததால் கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்வியை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு பெண் நிருபர் கேட்டதற்கு,

"பெண்ணாக இருந்துகொண்டு இப்படி இதயத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் பேசக்கூடாது' என்று கூறி இருக்கிறார் முதல்வர்.

ஆனால், தனது குடும்பப் பெண்களை முன்னிறுத்தித் தவறான செயல்பாடுகளுக்கு அவர்களை உடந்தையாக்கிய முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? தனது அரசியல் சூதாட்டத்துக்காகத் தனது குடும்பப் பெண்களைப் பகடைக் காய்களாக உருட்டிய குற்றத்துக்கு, முதல்வருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனைதான் இந்தத் துணைக் குற்றப்பத்திரிகை.

உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் கனிமொழியும், தயாளு அம்மாளும்! இந்த முறைகேடுகளுக்கு அவர்கள் விரும்பி ஆட்பட்டவர்கள் அல்லர்! முதல்வரின் மகளாக அல்லாமல், கவிஞராக கனிமொழி எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது. "அப்பா சொன்னாரென...'"

-இது ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி குற்றவாளியாக சேர்க்கப்பட்டது குறித்து தினமணி பத்திரிக்கையின் தலையங்கம்.

கனிமொழி அவர்கள் கருணாநிதியால் அரசியலுக்கு வரவழைக்கப்பட்டு, தற்போது பல்லாயிரம் கோடி ருபாய் ஊழலில் அவர் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கனிமொழி என்னும் ஒரு நல்ல பெண் கவிஞரை, தான் விழுந்த அதே அரசியல் சாக்கடையில் தள்ளிவிட்டு இருக்கிறார் கருணாநிதி.

இதோ, தினமணி குறிப்பிட்டுள்ள, கவிஞர் கனிமொழி எழுதிய "அப்பா சொன்னாரென" கவிதை வரிகள்....

அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டிக் கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று

(கருவறை வாசனை, ப. 17)

அப்பா சொன்னாரென ஊழலும் செய்தீர்களா?



"வளர்கின்ற பருவத்தில் ஆண்களைப் போலவே,பெண்களும் தங்களின் ஆளுமையை,தனித்தன்மையை நிருபித்து கொள்ள ஆர்வமாயிருக்கிறார்கள்.
ஆனால், உடல் கூறு வளர்ச்சி ஒன்ற போதும். சமுகத்தின் அத்தனை வக்கிரங்களையும் அவளுக்கு உணர்த்தி அவளை தேங்க செய்துவிடுகிறது. அவள்,வெறும் உடல் பாரமாய் தேங்கி விடுகிறாள்" - கவிஞர் கனிமொழி.

கனிமொழி, அரசியலில் வளர்கின்ற பருவத்தில் உங்கள் ஆளுமையை, தனித்தன்மையை நிரூபிக்க இத்தனை பெரிய ஊழலா செய்யவேண்டும்??

கனிமொழி,ஊழல் உங்களுக்கு "கருவறை வாசனையா"??
-இன்பா

Saturday, April 23, 2011

Sex and Zen 2 - சுடச்சுட "சூடான" திரைவிமர்சனம்



Sex and Zen 2 - இது "அவதார்" படத்தின் வசூல் சாதனைகளை முறியடித்து, தற்சமயம் உலகையே கலக்கி கொண்டிருக்கும் செக்ஸ் காமெடி திரைப்படம். சீனா மொழியில் உருவாகி இருக்கும் படம். இந்த படத்தின் விமர்சனம் இங்கே...

'ஐயோ..ஆபாசம்,விரசம்' என்னும் கருத்து உள்ள வாடிக்கையாளர்கள் இப்பதிவை படிக்க வேண்டாமே ....ப்ளீஸ்.

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்னும் சமுக சிந்தனையே(!) இப்பதிவின் நோக்கம்.

உலகின் முதல் 3D செக்ஸ் படம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இப்படத்திற்கு, வலையுலகில் முதல் முறையாக திரைவிமர்சனத்தை நாங்கள் எழுதியிருப்பது...பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு சாதனை.

Sex and Zen என்பது இரண்டு பகுதிகளை கொண்ட திரைப்படம். தற்போது உலக நாடுகளில் வசூலை குவித்து கொண்டு இருக்கும் படம் இரண்டாம் பாகமாகும்.

Sex and Zen என்பது சீன அரசால் தடை செய்யப்பட்ட ஒரு புத்தகத்தின் பெயர். நம்மூர் காம சாஸ்திரம் போன்று காம கலைகளை பேசும் புத்தகம். ஆனால், காமசாஸ்திரம் போன்று இது கலவியின் கல்வி பற்றி பேசும் புத்தகம் அல்ல.

இந்த வார்த்தையின் அர்த்தம் "You get happy when raping other's wife, what if yours get rapped". அதாவது பிறன் மனை நோக்கா குறளுக்கு நேர் எதிர்மறையானது என்பதாகும்.


Sex and Zen 1 : இப்படத்தின் முதல் பாகம். இதன் கதாநாயகன் Mo Yang San மிக சிறிய ஆணுறுப்பை கொண்டவன். தனது இளம் மனைவியை திருப்தி செய்ய இயலாதவனாக இருப்பவன்.

ஒரு அறுவை சிகிச்சை மருத்துவனிடம் சென்று தீர்வு கேட்கிறான். அவனோ, நம் கதாநாயகனின் உறுப்பை நீக்கி விட்டு, அந்த இடத்தில ஒரு குதிரையின் உறுப்பை பொருத்துகிறான். இதை தொடர்ந்து, உற்சாகம் அடையும் Mo Yang San பல பெண்களுடன், குறிப்பாக பிறர் மனைவிகளை மயக்கி காம களியாட்டத்தில் ஈடுபடுகிறான். கடைசியில், நம் ரத்தகண்ணீர் எம்.ஆர்.ராதா போன்று உடல் தளர்வுற்று வரும் வேளையில், ஒரு விபச்சார விடுதியில் தனது மனைவியை காண்கிறான்.

அவளோ இவனை அடையாளம் கொண்டு, அந்த அதிர்ச்சியில் விபச்சார விடுதியில் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.

இதனால், மனதளவிலும் கடும் வேதனை அடையும் Mo Yang San " எல்லாம் மாயா" என்று உணர்ந்து "பத்ரகிரியார்" போன்று ஒரு புத்த மடாலயத்தில் சென்று சேர்வதாக கதை முடிவடைகிறது.

இப்போது, Sex and Zen படத்தின் இரண்டாம் பாகமான Sex and Zen 2 : Extreme Estassy படம் பற்றி பார்ப்போம்.



ஜாக்கிசான் மற்றும் ஜெட்லி படங்களை தயாரித்து உள்ள, நமது கிராமபுறங்களிலும் கூட அறிமுகம் ஆகி இருக்கும் Goldan Harvest நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரித்து உள்ளது.

Loletta lee, shu qi,Ben ng போன்ற ஹாங்காங் நட்சத்திரங்கள் காண்பித்து இருக்கும்...ச்சே...நடித்து இருக்கும் இந்த படத்தை இயக்கி இருப்பவர்..Chin Man Kei.

(வாயில் நுழையாத பெயர்கள்...அட, அதுவாங்க முக்கியம்!?)

சின்முன் என்ற நகரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் மாஸ்டர் சைமுன், முதல் பகுதியின் நாயகனான Mo Yang San ஐ தனது ரோல் மாடலாக(?) வைத்து இருக்கிறான். அவனைபோலவே, தனது ஆண்மையும் மிக பலமாக இருக்கவேண்டும் என்பதையே குறிக்கோளாக (என்ன ஒரு லட்சியம்) வைத்து பயிற்சிகள் செய்பவன். இவனுக்கு Lung என்று ஒரு மனமுதிர்ச்சி இல்லாத மகன் மற்றும் Yiau என்று ஒரு அழகான மகள்.

ஊரில் உள்ள பெண்களையெல்லாம் கபளீகரம் செய்யும் சைமுன், மற்ற ஆண்களுக்கு பயந்து தனது மகளை ஒரு ஆண்வேடம் இட்டு வளர்க்கிறான். பிற ஆண்களுடன் அவளை படிக்க அனுப்பும் சைமுன், எந்திரங்களால் ஆன ஒரு ஸ்பெஷல் உள்ளாடையை தயாரித்து அதை தனது மகளை அணிய சொல்கிறான். மேலும், அந்த 'உள்ளாடை எந்திரந்தின்' சாவியை தனது கைவசம் வைத்து கொள்கிறான்.



அங்கு அவளுக்கு fatau என்ற சக மாணவனுடன் பழக்கம் ஏற்ப்பட்டு, பின் fatauவுக்கு வந்திருப்பது ஒரு பெண் என்று தெரிகிறது.

இதற்க்கு இடையில், ஊரில் பல இளம் பெண்கள் கற்பழித்து கொல்லபடுகிறார்கள். இதற்க்கு காரணம் Miraj என்ற ஒரு பெண். "secrests of verginity " என்ற ரகசிய புத்தகத்தை படித்துவிட்டு, அதன் படி, பெண்களுடன் உடலுறவு கொண்டு, அவர்களின் ஆற்றலை தனதாக்கி கொண்டு வருகிறாள் இந்த Miraj.

நினைத்த உருவை எடுக்கும் சக்தி பெரும் இவள், மாஸ்டர் சைமுனின் 'ஒன்றுக்கும் உதவாத' மகனை திருமணம் செய்து, பின்னர் சைமுனை மயக்குகிறார். சாமியின் "சிந்து சமவெளி"காட்சிகள் அநாகரீகமாக அரங்கேறுகின்றன.

Mirajக்கு கிடைத்த அதே ரகசிய புத்தகமான "secrets of verginity" நம் கதாநாயகி இயு சைமுன் கையில் கிடைக்கிறது. அதன்பின் fatau மற்றும் அந்த ஊரின் காவல் அதிகாரியான Ironman ஆகியோருடன் இணைந்து Mirajஐ எப்படி வீழ்த்துகிறாள் என்பதே படத்தின் மீதி "கதை (அ) சதை".

கூடவே, தனது தந்தை அணிவித்த "கற்பு கவசங்களை" எப்படி, எவ்வாறு உடைக்கிறாள் என்பது மற்றொரு கிளைக்கதை.




இப்படம் சீன அரச வம்சமான zen வம்சத்தை இழிவு படுத்துவதாக கூறி, சீன அரசு தடை செய்துவிட்டது.

zen வம்சம்தான், சிதறிக்கிடந்த சீன சாம்ராஜ்யத்தை ஒன்று திரட்டிய வம்சம். உலக அதிசயமாம் சீன பெருஞ்சுவரை கட்டிய வம்சம். இப்படம் அத்தைகைய zen வம்சத்தில் நடந்ததாக உலவி வரும் ஒரு நாட்டுபுற கதையை தழுவியது.

நமது கி.ரா என்னும் கி.ராஜநாராயணன் எழுதிய நாட்டுபுற கதைகளில் கூட, இதை போன்று செக்ஸ் சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன

"தட்ஸ்தமிழ்" புண்ணியத்தில்(!) நம்ம பசங்க மத்தியிலும், இந்தியாவிலும் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இப்படம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பெரும் எதிர்ப்பர்ப்புகளோடு வெளிவர விருக்கிறது sex and zen 2.

ஆனால், படத்தில் "சொல்லிகொள்கிற" காட்சிகள் நீங்கள் நினைப்பது போல இல்லை. "ஷகீலா டைப்" காலைகாட்சி மலையாள படங்களை போன்று ஒரு "பி" கிரேட் செக்ஸ் திரைப்படம்தான் இது.

ஒரே வித்தியாசம், இப்படத்தில் சப்பைமூக்கு சீனத்து பைங்கிளிகளின் (நன்றி : கவிஞர் கண்ணதாசன்)நிர்வாண காட்சிகள் இருக்கின்றன, அவ்வளவே. சொல்லப்போனால், 'ஷக்கு'(சுருக்கம்)படங்களின் 'கிக்கு' இதில் துளி அளவும் இல்லை என்றே கூறலாம்.

எந்த சினிமா விமர்சனம் என்றாலும், ஒரு 'பன்ச்' வரி சொல்லி முடிப்பதுதானே வழக்கம். அதன்படி,

Sex and Zen - Sex and None(?).


(பி.கு : கடைக்காரர் இன்பா, நாட்டுல எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது, இப்படி ஒரு 'ஆபாச சரக்கு' தேவையா? என்பவர்களுக்கு, டைட்டானிக்கை மூழ்கடித்து வரும் படத்தின் இமாலய வசூல் சாதனையே பதில்)

Wednesday, April 20, 2011

மங்காத்தா - ஒரு ஸ்பெஷல் ட்ரைலர்

Sunday, April 17, 2011

'ஆடுகளம்’ வ.ஐ.ச. ஜெயபாலன் - ஒரு அறிமுகம்



‘ஆடுகளம்’ படத்தில் பேட்டைக்காரனாக ஜெயபாலன் என்ற ஈழத்துக் கவிஞர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்படி அடையாளப்படுத்தக்கூடிய பாத்திரம் ஒன்றில் ஜெயபாலன் நடித்திருக்கிறார் என்பது ஈழத்தவர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது.

யார் இந்தப் பேட்டைக்காரன் என்கிற ஜெயபாலன் என்பதை ஈழத்தின் இன்றைய தலைமுறைக்கு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

வ.ஐ.ச. ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974ஆம் ஆண்டில் அங்கம் வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். முதலாம் வருடத்திலேயே போட்டியிட்டு மாணவர் ஒன்றியத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஜெயபாலன் அன்றைய நாட்கள் முதல் துடிப்பாகச் செயற்பட்டு வருகிறார். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்த காலத்தில் அதாவது எழுபதுகளில், ஈழத்தில் ஏற்பட்ட எழுச்சிகளில் இலக்கியத்திலும் செயற்பாடுகளிலும் ஜெயபாலன் பங்கு வகித்திருந்தார்.

இலக்கிய உலகமும் தமிழகமும் ஜெயபாலனை ஈழத்தின் சிறந்த கவிஞனாகவே அறிந்திருந்தது. 1969ஆம் ஆண்டு ஜெயபாலன் எழுதிய ‘பாலி ஆறு நகர்கிறது’ என்ற கவிதை, மொழியிலும் உள்ளடக்கத்திலும் ஆழமானது.

ஈழத்தில் ஏற்பட்ட எழுச்சியை முன்கூட்டியே பாலி ஆறு கவிதை பதிவாக்கியிருந்தது. வன்னி மண்ணின் வாசனையும் வரலாற்றுச் செய்திகளும் அடங்கிய அந்தக் கவிதை ஜெயபாலனின் முதலாவது கவிதை. தொடர்ச்சியாய் இன்றுவரை ஜெயபாலன் கவிதைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறார். சூரியனோடு பேசுதல் (1986), நமக்கென்றொரு புல்வெளி (1987), ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987), ஒரு அகதியின் பாடல் (1991), வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002) முதலிய நூல்களை ஜெயபாலன் எழுதியிருக்கிறார்.

கடந்த 2009இல் ஜெயபாலனின் ‘தோற்றுப்போனவர்களின் பாடல்கள்’ என்ற புத்தகத்தை ‘ஆழி’ பதிப்பகம் வெளியிட்டிருந்தது. தமிழ்க் கவிதை உலகில் மிகவும் முதிர்ச்சியடைந்த ஜெயபாலன் அந்தப் புத்தகத்திற்கு என்னையே முன்னுரை எழுதும்படி கேட்டிருந்தார். ஈழத்தவர்களின் இன்றைய கவிதை நிலவரங்கள் பார்வைகளுக்கு ஜெயபாலன் முன்னிடம் கொடுப்பதுடன் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஈடுபாடு காட்டுவார். அவருக்கு நான் எழுதிய முன்னுரையிலும் இன்றைய தலைமுறைக் கவிஞர்களின் கவிதைகளைப் பதிவாக்க வேண்டும் என்று விரும்பினார். வாழ்க்கையில் நம்பிக்கை தருவதிலும் இலக்கியத்தில் உற்சாகம் காட்டுவதிலும் ஜெயபாலன் மிகுந்த ஈடுபாடு காட்டுவார். இளையவர்களைத் தேடித் தேடி ஆர்வப்படுத்துபவர்.


ஜெயபாலனின் கவிதைகளில், ‘இலையுதிர்கால நினைவுகள்’ மற்றும் ‘நெடுந்தீவு ஆச்சி’ போன்ற கவிதைகள் முக்கிமானவை. பரந்த வாசிப்புக்கும் ஆழமான கருத்து நிலைகளையும் கொண்டிருக்கிறது. நிலத்திற்கும் புலத்திற்குமான அவலத்தையும் உணர்ச்சிச் செறிவையும் ஜெயபாலனின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. நிலம் சார்ந்த நெருக்கமான கவிதைகளும் புலம் பெயர் வாழ்வு அவலம் செறிந்த கவிதைகளிலும் ஜெயபாலன் முக்கிய பதிவுகளைச் செய்திருக்கிறார். இந்தக் கவிதைத் தரம் எட்டு பாடப்புத்தகத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது.


"யாழ் நகரில் என் பையன்

கொழும்பில் என் பெண்டாட்டி

வன்னியில் என் தந்தை

தள்ளாத வயதினிலே

தமிழ் நாட்டில் என் அம்மா

சுற்றம் பிராங்பேட்டில்

ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்

நானோ

வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்

ஓஸ்லோவில்

என்ன நம் குடும்பங்கள்

காற்றில்

விதிக்குரங்கு கிழித்தெறியும்

பஞ்சுத் தலையணையா?"


இந்தக் கவிதை ‘இலையுதிர்கால நினைவுகள்’ என்ற நீண்ட கவிதையின் சில வரிகள். ‘ஆடுகளம்’ படத்தின் உதவி இயக்குனர் ஹஸீன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தபொழுது இந்தப் படத்தையும் ஜெயபாலனின் பாத்திரத்தையும் குறித்து சில விடயங்களை மட்டும் சொன்னார்.

ஜெயபாலன் ஒரு பிரமாண்டமான பாத்திரமாக ‘ஆடுகள’த்தில் வருகிறார் என்றார் ஹஸீன். இந்தப் பாத்திரம் இதுவரையில் தமிழ் சினிமாவில் பார்த்திருக்காத ஒரு பாத்திரமாக இருக்கும் என்றும் ‘ஆடுகள’த்தில் அவர் முக்கியமான பாத்திரமாக வருகிறார் என்றும் அவர்தான் அதற்குப் பொருத்தமானவர் என்றும் ஹஸீன் அப்பொழுது சொன்னார்.

ஜெயபாலன் உணர்ச்சிகள் நிறைந்த ஆள். அன்பு, கோபம், கழிவிரக்கம், போர்க்குணம், காதல் என்று உணர்ச்சிகள் நிறைந்த மனிதன். ஜெயபாலனின் கவிதைகளில் இந்த உணர்ச்சிகள்தான் நிறைந்து கிடக்கின்றன.

அவர் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தபொழுது துடிப்பான மாணவராக நின்று செயற்பாடுகளில் ஈடுபட்டவர். ‘ஆடுகள’த்தில் உணர்ச்சிகள் நிறைந்த பிரமாண்டமான பாத்திரமாக வருகிறார்.



மதுரையில் அந்த நிலத்தின் வாசனையுடன் வாழ்க்கைக் கோலங்களுடன் ‘ஆடுகளம்’ படமாக்கப்பட்டிருக்கிறது. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றிமாறன் ‘பொல்லாதவன்’ என்ற தனுஷ் நடித்த படத்தையும் முன்னர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பேட்டைக்காரனாக ஜெயபாலனை எவ்வளவு பொருத்தமாக வெற்றிமாறன் தெரிவு செய்தாரோ அவ்வளவு பொருத்தமாக கறுப்பாக தனுஷைத் தெரிவு செய்திருக்கிறார்.

பேட்டைக்காரன் மதுரையில் சேவல்களை வளர்த்து சண்டைக்கு விடுபவன். பேட்டைக்காரனுடன் கறுப்பும் துரையும் சேர்ந்து சேவல்களைச் சண்டைக்காக வளர்க்கிறார்கள். பேட்டைக்காரனுடன் இருந்து சேவல்களை வளர்த்து அவை சண்டைக்கு ஏற்ற சேவல்களாக்குவது, வித்தைகளைக் கற்றுக்கொள்வது போன்றவை இவர்களின் வாழ்க்கை. தனுஷ், கிஷோர் போன்றவர்கள் இப்படித்தான் பேட்டைக்காரனுடன் இருந்து சேவல்களை வளர்த்து வருகிறார்கள். அந்தக் கிராமத்தில் இது ஒரு பெரிய வேலையாக அல்லது பொழுதுபோக்காக அல்லது போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களாக பேட்டைக்காரனின் சேவல்களைத் தோற்கடிக்க முடியாது இருக்கிறது. சண்டைக்காக சேவல் வளர்ப்பதில் பேட்டைக்காரன் கைதேர்ந்த ஆளாக இருக்கிறான். பேட்டைக்காரனின் இந்த வித்தைகளைக் கற்றுக்கொண்டு எப்படியாவது சேவல் சண்டையில் வெல்ல வேண்டும் என்பது கறுப்பின் ஒரே இலட்சியமாகிறது.

சண்டைக்கு ஏற்றதல்ல என்று அறுக்கச் சொன்ன சேவலை கறுப்பு வளர்த்து சண்டைக்களத்தில் இறக்குவதிலிருந்து பேட்டைக்காரனுக்கும் கறுப்புக்கும் முறிவு ஏற்படுகிறது. பேட்டைக்காரனாகவும் சேவல் சண்டைக்காரனாகவும் வாழந்தால்தான் வாழலாம் என்கிற சூழ்நிலையினால்தான் பேட்டைக்காரன் குமுறுகிறான். பேட்டைக்காரன் என்கிற பாத்திரத்தில் வரும் ஈகோத்தனமும் கோபமும் தொடர்ந்து படத்தை நகர்த்திச் செல்கிறது. சேவல் சண்டை ஆள் சண்டையாக மாறுகிறது. இரண்டு சேவல்களைப் போல கறுப்பும் துரையும் மோதிக் கொள்கிறார்கள். கறுப்பு அனுபவிக்கும் நெருக்கடிகளைப் பேட்டைக்காரனின் ஏகோத்தனமே உருவாக்குகிறான். இறுதியில் பேட்டைக்காரனின் பொறாமைத்தனம் பற்றி கறுப்பு அறியும் உண்மைளைத் தனக்குள் இரகசியமாக்கி பேட்டைக்காரனைக் கௌரவப்படுத்துகிறான்.

கறுப்பு என்கிற இளைஞன் ‘ஆடுகள’த்தில் மதுரையின் முக்கிய குறியீடு. சேவல் சண்டை என்று அதிலேயே கவனம் செலுத்தி அதற்காகவே வாழ்கிறான். அதற்காகவே எல்லா துரயங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கிறான். தனுஷ் முக்கியமான அடையாளப்படுத்தக்கூடிய, பேசக்கூடிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பேட்டைக்காரனாக ஜெயபாலன் சகல உணர்ச்சிகளையும் காட்டியிருக்கிறார். வாசனையுடன் படத்தில் மதுரைக் காட்சிகள் வருகின்றன. சாராயக்கடை, பேட்டைக்காரனின் வீடு, தெருக்கள், கறுப்பின் வீடு, சண்டையிடும் வெளிகள, கோழிச் சண்டைக்களம் போன்ற பல காட்சிகள் யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் இசையும் பாடல்களின் இசையும் பார்வையையும் கவனத்தையும் ஈர்த்து படத்தின் வெளியில் ஆர்வமாகக் கொண்டு செல்கிறது. வெற்றிமாறன் இந்தப் படத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஜெயபாலனுக்கு ராதாரவியின் பின்னணிக் குரல் முழுமையாகப் பொருந்தியிருக்கிறது. உணர்ச்சிகளின் போராட்டம் மிக்க பாத்திரத்தை ஜெயபாலன் நேர்த்தியாகச் செய்திருக்கிறார். ‘ஆடுகள’த்தில் வெற்றிமாறன் கவிஞர் ஜெயபாலனை ஒரு பிரமாண்டமான பாத்திரமாக உருவாக்கியிருக்கிறார்.

மதுரையின் கிராம வாழ்க்கைச் சூழலைப் பதிவாக்கியிருக்கிறார். பேட்டைக்காரன் என்ற பாத்திரத்தின் மூலம், கறுப்பு என்ற பாத்திரத்தின் மூலம் இரண்டு பாத்திரங்களின் இடையிலான இரண்டு தலைமுறைகளின் உறவையும் முரண்பாடுகளையும் சித்தரித்திருக்கிறார். படத்தில் வரும் வசனங்கள் மிகவும் ஆழமும் நேர்த்தியும் கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்படவேண்டிய காட்சிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் மனவெளி முரண்பாடுகளையும் வெற்றிமாறன் ‘ஆடுகள’த்தில் பதிவாக்கியிருக்கிறார்.


(நன்றி : உயிர்மை பதிப்பகம்)

Saturday, April 16, 2011

'சிட்டுக்குருவி' சேதி கேளுங்கள்



உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 அன்று சந்தடியின்றி கடந்து சென்று விட்டது. ஏன் இந்தச் சிறிய பறவைக்கு உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது? காரணம் இருக்கிறது. உலகெங்கிலும் பரவி வாழும் சிட்டுக்குருவிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில்தான் 60 சதவீத சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சிட்டுக்குருவிகள் நாள்தோறும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் மற்றும் அதன் பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், அதன் மூலம் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும் தான் இந்த நாள் உலக சிட்டுக்குருவிகள் நாளாக 2010-ம் ஆண்டிலிருந்து மார்ச் 20 அன்று நினைவுறுத்தப்படுகிறது.

மனிதன் வாழும் வாழ்விடத்தையே தன் வாழ்விடமாக மாற்றி, நம் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் இணைத்து, மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, நம் வீட்டில் ஒருவராக வாழ்ந்த ஒரு பறவை இனம் என்றால் அது அடைக்கலத்தான் குருவி எனும் சிட்டுக்குருவிதான்.

உலகம் போற்றும் பறவையியலார் டாக்டர் சலீம் அலி சிறுவனாக இருந்தபோது தன் வீட்டில் சிட்டுக்குருவிக் கூட்டில் இருந்து கீழே விழுந்த சிட்டுக்குருவிக் குஞ்சுகளின் அழகில் மயங்கி, பின்னாளில் தன் வாழ்நாளையே பறவைகள் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். அந்தப் பறவையியல் மாமேதையை இந்தியாவுக்குத் தந்ததும், உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தச் சிட்டுக்குருவிகள்தான்.

உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தச் சிட்டுக்குருவிகள் மெடிட்டரேனியன் பகுதியில் தோன்றியதாக அறியப்படுகிறது.

முதன்முதலில் வட அமெரிக்காவில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மற்றும் நியூயார்க் நகரங்களில் 1851, 52-ம் ஆண்டுகளில் இவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதற்கு முக்கிய காரணம், அவைகள் பூச்சியினங்களைப் பிடித்துச் சாப்பிட்டு, உணவுத் தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், உண்மையில் இளம் குஞ்சுகளுக்கு உணவூட்ட மட்டுமே அவைகள் பூச்சிகளைப் பிடித்து வருகின்றன.

பொதுவாக மற்ற பறவைகளைப்போல் சிட்டுக்குருவிகளை அடர்ந்த காட்டுப் பகுதியிலோ அல்லது பாலைவனத்திலோ காண முடியாது. அவைகள் மனிதனின் வாழ்விடங்கள், குறிப்பாக வீடுகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளில்தான் பொதுவாக தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும்.

கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளின் இடுக்குகளில், வீட்டில் உள்ள போட்டோக்களின் பின்புறம் வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக்கொண்டு ஓர் ஒழுங்கற்ற முறையில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழும். ஆனால், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனோ, அழகோ அதன் வடிவமைப்பில் உள்ள நேர்த்தியோ இவை கட்டும் கூடுகளில் இருக்காது.

பெரும்பாலும் கூடுகட்டும் பணியை ஆண் பறவைகள்தான் மேற்கொள்கின்றன. குளிர்காலங்களில், தெருவோரம் உள்ள மின் விளக்குகளில் கூடுகட்டி இருப்பதைக் கிராமங்களில் காணலாம். ஏனெனில், கடும் குளிரிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கள் கூடுகளை மின்விளக்குகளில் கட்டும். இந்தக் குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு தானியங்களின் விதைகள் மற்றும் புற்கள் ஆகும்.

மனிதனோடு நெருங்கிப் பழகுபவை என்று அறியப்பட்ட சிட்டுக்குருவிகள், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து புழுதியில் அரை வட்டவடிவில் பள்ளம் அமைத்து அதில் மண்குளியல் நடத்தும். மழைக்காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீரில் அல்லது தண்ணீர் கிடைக்கும்போதெல்லாம் அவை கூட்டம் கூட்டமாக நீராடுவது வழக்கம். அதன் பிறகு இறகுகளைக் கோதிக் கொள்வதும், அதை உலர்த்திக் கொள்வதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், அதன் இறகுகளில் ஏதாவது ஒட்டுண்ணிகள் இருந்தால் அதை வெளியேற்றவும் தன் இறகைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்தான் அவைகள் இவ்வாறு செய்கின்றன.

சிதறும் தானியங்கள்தான் இந்தச் சிங்கார சிட்டுக்குருவிகளின் பிரதான உணவு. இன்று நவீனமயமானதன் விளைவு, எல்லா தானியங்களும் ஆலைகளிலேயே கல், மண் நீக்கிய பிறகு உடனே சமையல் செய்யும் விதமாக பாலிதீன் பைகளில் வந்துவிட்டன.

முன்பு உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் வைத்து வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் குறுநொய் நீக்கி , புடைத்து உணவு சமைக்க உதவுவாள் அன்றைய பாட்டி. இன்றைய பாட்டி கருணை இல்லங்களில் அடைக்கலமானதால் இன்று பாட்டியும் இல்லை. முறமும் இல்லை. தானியங்களும் அதிகம் சிந்துவதில்லை. சிட்டுக்குருவிகளுக்கு உணவும் இல்லை.

இரண்டாவதாக, தானியங்கள், விதைகள்தான் இவைகளின் முக்கிய உணவாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்கு உணவுக்கு அவைகள் தோட்டத்துச் சிறு பூச்சிகள், புழுக்களையே முழுவதும் நம்பி உள்ளன.

முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளுக்கு முதல் உணவு இந்தத் தோட்டத்துப் புழுக்களும், பூச்சிகளும்தான். நமது கிராமத்து வீடுகளில் தாய்ப்பறவை அடிக்கடி வெளியில் பறந்துபோய் குஞ்சுகளுக்குப் பூச்சிகளைப் பிடித்து உணவாகக் கொடுத்துக் கொண்டிருக்கும். நமது வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள செடிகளையெல்லாம் அழித்து கான்கிரீட் காம்பவுண்டுகளாக மாறிவிட்ட நகரச்சுழலில் எங்கே புதர்ச் செடிகளையும், உயிர் வேலிகளையும் காண முடிகிறது?அதையும் மீறி இப்போது நகரங்களில் காணப்படும் தோட்டங்களில் அழகுச்செடிகள் என்ற போர்வையில் வேற்றிடத்துத் தாவர இனங்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன. குறிப்பாக, நமது நாட்டுத் தாவரங்களும், புற்களும் இல்லாததால் அதை நம்பி வாழும் புழுக்கள், பூச்சிகள் அரிதாகிவிட்டன.

மிக முக்கியமாக விவசாயத்தில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் விளைவாக, நாம் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. மாறாக, சிட்டுக்குருவிகளின் சந்ததிகளையும் சேர்த்துத்தான் அழித்துவிட்டோம். ஆம், நாம் சிட்டுக்குருவிகளின் செல்லக் குழந்தைகளுக்கு உணவாக உள்ள பூச்சிகள், புழுக்களை பூச்சிக்கொல்லிகள் பதம் பார்த்து விடுவதால் அங்கே அவற்றுக்கு நிரந்தரமான உணவுப் பஞ்சம். சிட்டுக்குருவிகள் யாரிடம்தான் முறையிடும்?

மூன்றாவதாக, உணவுக்குத்தான் இப்படிப் போராட்டம் என்றால் மனிதனின் குறுகிய சிந்தனையின் விளைவாக கான்கிரீட் காடுகளாகிவிட்ட நிலையில் சிட்டுக்குருவிகள் எங்கே போய் வீடு கட்ட முடியும்? அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிய வீடுகள், எப்போதும் மூடியே இருக்கும். முழுவதும் மூடிய வீட்டுக்குள் எப்படி இவைகள் புதுக்குடித்தனம் புகுந்து குடியிருக்க முடியும்?

நான்காவதாக, இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு தன் சிறிய கூட்டைக் கட்டி வாழ்க்கையைத் தொடங்கலாம் என நினைத்தால் அங்குதான் சிட்டுக்குருவிகளுக்கு காத்திருக்கிருக்கிறது பேரதிர்ச்சி.

மனிதனின் நாகரிக வளர்ச்சியில் கைப்பேசி பிரதானமாகிவிட்டது. இவைகள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்கிற நிலை உருவாகிவிட்டது. மாநகரங்கள், நகரங்களில் கைப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதன் விளைவு கைப்பேசி கோபுரங்களில்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அதிர்வலைகளால் பறவைகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது.

கைப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியிடப்படும் "மின்காந்தக்' கதிர்வீச்சுகள் பறவைகளின் முட்டைகளை அதன் கருவிலேயே பதம் பார்த்து வருவதாக ஆராய்ச்சிகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

கைப்பேசிக் கோபுரங்கள் வெளியிடும் மிகக் குறைந்த அளவு கதிரியக்க அதிர்வலைகள் 900 முதல் 1,800 மெகாகர்ஸ். இவை மைக்ரோ அலைகள் என்று சொல்லக்கூடிய மின் காந்த அலைகள் என அழைக்கப்படுகின்றன.

இவை முட்டையின் மேல் தட்டின் கடினத்தன்மையை முற்றிலும் பாதித்து ஒரு மெல்லிய சவ்வு போன்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கைப்பேசிக் கோபுரங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவை பறவையினத்துக்கும் தேனீக்களுக்கும் அடிக்கப்பட்ட சாவு மணியாகின்றன.

ஏனெனில் பறவைகள் மிகவும் நுண்ணறிவு கொண்டவை. இந்த மின்காந்த அலைகள் பறவைகளின் உணர்வுத் திறனைப் பாதித்துத் தவறாக வழிகாட்டி தங்கள் உணவைத் தேடுவதில் சிக்கல் ஏற்படுத்தி மற்ற உயிரினங்களுக்கு எளிதில் உணவாக்கி விடுகின்றன.

சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகள் உதவியுடன் எந்தச் செலவுமில்லாமல் இயற்கையான முறையில் பூச்சிகள் பெருகி பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், நாம்தான் அதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் ரசாயன பூச்சிக்கொல்லிகள்தான் ஒரே தீர்வு என தவறாகப் புரிந்துகொண்டு நம் மண்ணையும், நம் வாழ்வையும் நஞ்சாக்கி வருகிறோம்.

அழிவது சிட்டுக்குருவிகள்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கு அடித்த அபாய ஒலியாகப் பாவித்து நம் குழந்தைகளுக்குச் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து அவைகளைப் பாதுகாக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தானியங்கள், கொஞ்சம் தண்ணீர். அவை உங்கள் வீட்டில் தங்குவதற்கு ஒரு சிறிய பெட்டி. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நம் நாட்டுச் செடிகள். மரம் நடும்போது மறந்தும் அழகுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வேற்றிடத்து மரங்களை நட வேண்டாம். பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் அறவே தவிர்த்திடுவோம். இயற்கை முறையில் பயிரிட முயல்வோம். இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம். சிட்டுக்குருவிகள் பாதுகாப்பின் அவசியத்தை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அவர்களை இதில் ஈடுபடுத்துவோம்.

கிராமங்களில் அன்று, சிட்டுக்குருவிகள் தங்கள் வீடுகளில் கூடு கட்ட ஆரம்பித்தால், அதைப் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். அவைகள் கட்டும் கூட்டுக்குக் குழந்தைகளால் எந்தவிதமான ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

சிட்டுக்குருவிகள் என்னும் இந்த சின்னத் தேவதைகள் தங்கள் வீட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என திடமாக நம்பினார்கள். இது கோடைகாலம் ஆதலால் சிட்டுக்குருவிகள் முதல் மற்ற பறவைகள் வரை உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவியாய்த் தவித்துப் போகின்றன. இந்த அடைக்கலத்தான் குருவிகள் மனிதரிடம் அடைக்கலம் வேண்டி நம் வீட்டின் கதவைத் தட்டி நிற்கின்றன. இவ்வளவு கஷ்டங்களிலும் இந்தச் செல்லச் சிட்டுகள் நம்மிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் செலவில்லாத சின்ன விஷயங்களை மட்டும்தான்.

நாம் செய்ய வேண்டியது கொஞ்சம் தானியம், கொஞ்சம் தண்ணீர், தங்க சிறிய இடம், முடிந்தால் சிறிய இயற்கை காய்கறித் தோட்டம், அப்புறம் பாருங்கள் இந்தச் சின்னச் சிங்காரத் தேவதைகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். அத்துடன் உங்கள் குடும்பத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டுவரும்.

(கட்டுரை : அலெக்சாண்டர்,பசுமை உயிரினப்பன்மை சரணாலயத்தின் செயல் இயக்குநர், நன்றி : தினமணி)





கான்க்ரீட் காடுகளுக்குள்
சிட்டுக்குருவியின் கூட்டையும்
விட்டு விடாமல்
'பிளாட்' போட்டு விற்கும்
நாகரீக மனிதர்களால்...

விட்டுப்போன உறவுகளாய் போயின
சிட்டுக்குருவிகள்.

இனி
அழிந்து வரும் இனங்களில்...
இலங்கை தமிழினத்தோடு
சிட்டுக்குருவியினமும்.

பெற்றோர்,உற்றார் அருமை
தெரியாத
ஐ.டி. மனிதனுக்கு
பறவைகளா முக்கியம்?

அண்டை வீட்டு முகவரிகூட
அறியாதவனுக்கு
சிட்டுக்குருவிகளின்
சிநேகிதம் புரியுமா?

சிட்டுக்குருவியின் சங்கீதம்
இனி,
'ரிங்டோனில்'மட்டும்....



(க(வலை)விதை : இன்பா)

Tuesday, April 12, 2011

இந்து தீவிரவாதம் - சுவாமி அசிமானந்தர் வாக்குமூலம்



இதுவரை தீவிரவாதம் என்றாலே, அது இஸ்லாமியர்களுக்கான ஒன்று என்று நாம் நினைத்து கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய அறியாமை என்பது சுவாமி அசிமானந்தா அவர்களின் வாக்குமூலத்தில் இருந்து விளங்கும்.

"120க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் பலி வாங்கிய ஆறு குண்டுவெடிப்புகளுக்கு இந்து தேசியவாதிகள்தாம் பொறுப்பு " என்று முதல் முறையாக இந்து தீவிரவாதம் பற்றி வெளிப்படையாக அறிவித்தவர் சங்க பரிவாரை சேர்ந்த அஸீமானந்தர். கலீம் என்கிற முஸ்லிம் நண்பரே தனது மனமாற்றத்திற்கு காரணம் என்று அவர் கூறியிருப்பது, சர்வதேச அளவில் கவனம் பெற்று உள்ளது.

இது தொடர்பான காலச்சுவடு, "த கேரவான்" இதழில் இருந்து மொழிபெயர்த்து உள்ள ஒரு கட்டுரை....

முஸ்லிம்கள் குறித்த வகைமாதிரி பிம்பங்களில் வலுவானது, அவர்கள் இயல்பிலேயே ஆவேசமானவர்கள் என்பது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சையத் அஹமது பரேல்வியின் தலைமையில் நடை பெற்ற ஜிஹாத் இயக்கம்; தங்கள் நலன்களைக் காத்துக்கொள்ள எப்படிப் போராட வேண்டுமென முஸ்லிம்களுக்குத் தெரியும் என்று சொன்னபோது சையத் அஹமதுகானின் குரலில் ஒலித்த அச்சுறுத்தும் தொனி; கிலாஃபத் இயக்கமும் மாப்ளா கலவரமும்; 1946ஆம் ஆண்டின் ‘நேரடி நடவடிக்கை’ தினம் - இவை அனைத்தும் முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்னும் படிமத்தையே மீட்டுறுதி செய்தன. பலவீனர்கள் என்று இல்லாவிட்டாலும் அமைதியை விரும்புபவர்கள் என்று இந்துக்களைப் பற்றியுள்ள பிம்பத்துக்கு நேரெதிரானதாக இது அமைந்தது.

மகாத்மா காந்தியின் கூற்றை அடியொற்றி இந்த எதிரெதிர் பிம்பங்கள் துல்லியப்பட்டன. கிலாஃபத் இயக்கத்தின்போது நடந்த கலவரங்களுக்குப் பிறகு அவர், இந்து இயல்பாகவே கோழை என்றும் முஸ்லிம் இயல்பாகவே ரவுடி என்றும் கூறினார்.

காந்தியின் அகிம்சை இந்துயிசத்தோடு தொடர்புகொண்ட பகவத் கீதையிலிருந்தும் இந்துயிசத்துடன் நெருங்கிய உறவு கொண்ட சமணத்திலிருந்தும் பெறப்பட்டது.

1920களின் தொடக்கத்தில் ‘எல்லை காந்தி’ அப்துல் கஃபார் கான் செஞ்சட்டை இயக்கத்தை வட கிழக்கு மாகாணத்தில் தொடங்கியபோதிலிருந்தே முஸ்லிம் சத்யாக்கிரகிகள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனாலும் இந்துக்களை அகிம்சையோடும் முஸ்லிம்களை வன்முறையோடும் அடையாளப்படுத்தும் போக்கு தொடர்ந்தது. சைவ உணவுக்கும் அசைவ உணவுக்கும் இடையே உள்ள முரண்பாட்டுக்கும் இதற்கும் நிறையவே தொடர்பு இருந்தது.

கடந்த மாதம் ஸ்வாமி அஸீமானந்தர் அளித்த வாக்குமூலம் இந்த வகைமாதிரி பிம்பங்களைப் புரட்டிப்போட்டது. 120க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் பலி வாங்கிய ஆறு குண்டுவெடிப்புகளுக்கு இந்து தேசியவாதிகள்தாம் பொறுப்பு என்று காவி உடை தரித்த இந்தச் சங்கப் பரிவாரத் தலைவர் ஒப்புக்கொண்டார்.

இந்தத் தாக்குதல்கள் இஸ்லாமியர்கள் நிகழ்த்திய குண்டு வெடிப்புகளுக்குப் பதிலடி என்று சொல்லப்பட்டாலும் இந்தத் தீவிரவாதக் குழுவின் முக்கியப் புள்ளியான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகச் சங்கத்தின் பிரச்சாரக் (முழுநேர ஊழியர்) சுனில் ஜோஷி, 1999-2000ஆம் ஆண்டுகளிலேயே - 2001இல் இஸ்லாமியர்களின் தொடர் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பே - வெடி குண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.

தவிர, இஸ்லாமிய குண்டு வெடிப்புகளில் பலியான இந்துக்களின் மரணத்துக்குப் பழிவாங்குவதற்காக அதிகபட்ச உயிரிழப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஹைதராபாதின் மெக்கா மசூதி, அஜ்மீர் ஷரீஃப் தர்க்கா ஆகிய இலக்குகளைத்தான் தேர்வு செய்ததாக ஸ்வாமி அஸீமானந்தர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ‘குண்டுக்கு குண்டு’ என்னும் அவரது தத்துவம் காந்தியக் கொள்கைக்கு நேர் எதிரானது. அன்பு, பரிவு ஆகியவற்றின் மூலம் வன்முறையை அகிம்சையாக மாற்ற வேண்டும் என்றே காந்தி எப்போதும் கூறிவந்தார்.



வன்முறைக்குக் காரணமானவர்கள் - தான் உள்பட - இந்துக்கள் என்பது மட்டுமல்ல, தன் மனமாற்றத்துக்குக் காரணமானவர் ஒரு முஸ்லிம் என்பதையும் ஸ்வாமி அஸீமானந்தர் தனது வியப்பூட்டும் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அவரது வாக்குமூலத்தின் அற்புதமான முன்னுரை இவ்வாறு கூறுகிறது:

“நான் ஹைதராபாத் சஞ்சல்குடா மாவட்டச் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது என்னுடன் இருந்த கைதிகளில் ஒருவரான கலீம் என்பவரால்தான் நான் இந்த வாக்கு மூலத்தை அளிக்கிறேன். கலீமிடம் நான் பேசியபோது அவர் இதே மக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் முன்னதாகக் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிந்தது. அவர் இந்த வழக்குக்காக ஒன்றரை ஆண்டுக்காலம் சிறையில் இருந்திருக்கிறார். சிறையில் கலீம் எனக்கு நிறைய உதவிகள் செய்தார். எனக்கு உணவும் தண்ணீரும் எடுத்து வந்து தருவார். அவருடைய நன்னடத்தை என் மனத்தைத் தொட்டது. செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்; இந்த வழக்கில் நிரபராதிகள் பாதிக்கப்படாமல், உண்மையான குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் ஒப்புதல் வாக்குமூலம் அளி என்று என் மனசாட்சி என்னிடம் சொன்னது”.

உளவியல்ரீதியான இந்த மாற்றம், ஆன்ம சக்தியால் மாற்றத்தை ஏற்படுத்துவது என்று காந்தி குறிப்பிட்டதைப் பிரதிபலிக்கிறது.

அதிகாரத்தின் மூலமாகவோ அச்சுறுத்தலின் மூலமாகவோ அல்லாமல் தனிப்பட்ட முறையில் ஆழமான மாற்றத்தை ஏற்படச் செய்வதன் மூலம் தன் எதிராளிகளின் போக்கை மாற்ற வேண்டுமென அவர் விரும்பினார். தன் உரிமைகளைப் பிறரை மதிக்கவைக்கத் தன் உடல்பலத்தைக் கலீமால் பயன்படுத்த முடியாத நிலையில்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்று வாதிடலாம்.

ஆனால் காந்தியின் அகிம்சையை இந்தியா ஏற்றுக்கொண்டதும் அப்படித்தான். ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களை விரட்ட முடியாத நிலையில்தான் இந்தியா இருந்தது. ஆங்கிலேயர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்வதற்கான உத்தியாகவே அகிம்சை இருந்தது என்று நேரு சுதந்திரத்துக்குப் பிறகு ஒப்புக்கொண்டார்.

குண்டுவெடிப்புகளால் எந்த நன்மையும் விளையாது; மாறாக மேலதிகப் பாரபட்சங்களுக்கும் துயரங்களுக்கும் அவை வழிவகுக்கும் என்று கருதும் முஸ்லிம்கள், தங்களது பாதுகாப்பு, மரியாதை ஆகிய அதே காரணங்களுக்காக அகிம்சையை நோக்கித் திரும்பலாம். கடந்த சில வாரங்களில் கலீம், முஸ்லிம்களின் சில பிரிவினரால் மகத்தான மனிதராக ஆராதிக்கப்பட்டார்.

குவாமி அவாஸ் இதழின் முன்னாள் ஆசிரியரும் சிவில் உரிமைக்கான மையத்தின் பொதுச் செயலாளருமான சயீது மன்சூர் ஆக்ரா, மோடியைப் புகழ்ந்து மௌலானா குலாம் முகம்மது வஸ்தான்வி பேசியதை ஆதரித்து இவ்வாறு எழுதினார்:

“மோடி விஷயத்தில் பெரிய நம்பிக்கை ஏதும் எங்களுக்கு இல்லை. இருக்கவும் கூடாது. அதே சமயத்தில், அல்லாவின் கருணையையும் ஞானத்தையும் தவறாகப் புரிந்துகொள்வது இஸ்லாத்துக்குப் புறம்பானவர்களின் (காஃபிர்) போக்குக்கு இணையானது. அல்லாவின் கருணை வற்றிவிடவில்லை என்பதை நாம் தீவிரமாக நம்புகிறோம்.

ஸ்வாமி அஸீமானந்தரின் மன சாட்சியை அல்லா விழிப்படையச் செய்த விதத்தை நாம் பார்த்தோம். அஸீமானந்தர் செய்த தவறுகளை நன்கு அறிந்திருந்தபோதிலும் கலீம் அவரிடம் நடந்துகொண்ட விதம் பின்பற்றத்தகுந்த ஒரு சிறப்பான முன்னுதாரணம். அதேபோல மோடி மற்றும் அவரது தோழர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பக்கூடிய இன்னொரு கலீமை அனுப்பும்படி நாம் அல்லாவிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்”.

கருணை உள்ளம்கொண்ட முஸ்லிம்களால் மோடியின் மனத்தை மாற்றிவிட முடியும் என்று நம்புவது அணுகுண்டைத் தாங்கிச் செல்லும் விமான ஓட்டியின் மனத்தைத் தன்னால் மாற்றிவிட முடியுமென்ற காந்தியின் நம்பிக்கையைப் போலவே ஒரு லட்சியக் கனவுதான்.

ஜே. எஸ். பண்டூக்வாலா என்னும் குஜராத் முஸ்லிம்தான் இத்தகைய வாதத்தை முதன்முதலில் முன்வைத்தார். இவர் குஜராத் மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். 2002இல் பரோடாவில் நடந்த கொலை வெறித் தாக்குதலில் மயிரிழையில் பிழைத்தவர். ஹர்ஷ் மந்தர் எழுதிய ஃபியர் அண்ட் ஃபர்கிவ் னெஸ் (அச்சமும் மன்னிப்பும்) என்னும் நூலுக்கு அவுட்லுக் இதழில் 2009இல் அவர் எழுதிய மதிப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்: “மன்னிப்பு, 2002இல் நடந்த மாபெரும் சோகத்தால் இந்துயிசத்திற்கு ஏற்பட்ட இழப்புக் குறித்து குஜராத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் உள்ள இந்துக்களின் மனசாட்சியையும் விழிப்புறச் செய்யலாம்.”

ஆதிக்கம் செய்பவர் குற்றவுணர்ச்சி கொள்ளக்கூடியவராக இருக்கும்போதுதான் அகிம்சைக்குப் பலன் இருக்கும். ஆங்கிலேயர்களும் சரி, தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் யுகத்தைச் சேர்ந்தவரும் மேற்கத்திய மனிதாபிமானக் கோட்பாடுகளிலிருந்து சில அம்சங்களை வரித்துக்கொண்ட அதிபர் ஃப்ரெட்ரிக் மில்லியம் டெ கிளர்க்கும் சரி, செய்த தவறுக்கு வருந்தும் இயல்பைக்கொண்டிருந்தனர்.

தலாய்லாமா விஷயத்தில் சீன அரசுக்கு அப்படிப்பட்ட உணர்வு எதுவும் இல்லை. கருத்தியல்ரீதியான ‘நல்ல’ காரணங்களின் அடிப்படையில் திபெத்தியர்களுக் கெதிரான தங்கள் வன்முறையை அவர்களால் நியாயப்படுத்த முடியுமென்பது காரணமாக இருக்கலாம்.

இந்தியா விஷயத்தில் எப்படி? அகிம்சைக் கோட்பாடு முஸ்லிம்களின் நடத்தையில் முக்கிய இடம்பிடித்தால் அதற்கு இந்து தேசியவாதிகள் - அல்லது தீவிரப் போக்கற்ற இந்துக்கள் - இணக்கமான முறையில் எதிர்வினை ஆற்றுவார்களா? முஸ்லிம்களுடன் சண்டையிடுவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு (கருத்தியல்ரீதியான) ‘நல்ல’ காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் வெறுப்பு அரசியல், முஸ்லிம் பண்பாடு குறித்த எல்லா விதமான மரியாதையையும் - ஏன் அதன் இருப்பையும்கூட - சாத்தியமற்ற தாக்கிவிடுமா? காலம் பதில் சொல்லும்.

நன்றி: காலச்சுவடு மற்றும் The caravan.

Sunday, April 10, 2011

பில்லா 2 - யுமா & ஹேமந்த்



யுமா குரேஷி - இவர்தான் பில்லா 2 படத்தில் அஜித்துடன் நடிக்கபோகும் நாயகி.

டெல்லியை சேர்ந்த பிரபல மாடல். முன்னணி டிவி விளம்பர நடிகை. அமீர்கானுடன் சாம்சங் மொபைல் விளம்பரத்திலும், ஷாருக்கானுடன் நேரோலாக் விளம்பரத்திலும் நடித்து உள்ளார்.

இது தவிர, ஏராளமான விளம்பர படங்கள், LG,Pears Soap,Idea,Bajaj Motorbike போன்றவற்றை அறிமுகம் செய்தவரும் இவரே.

பில்லா 2 படத்தின் இயக்குனர் சாக்ரி டோலேடி " இப்படத்திற்கு அழகும், திறமையும் கொண்ட பொருத்தமான கதாநாயகியை தேடுவது சவாலாக இருந்தது.யுமா குரேஷி மிக சரியாக பொருந்தி இருக்கிறார்" என்கிறார்.

பில்லா 2 படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாகவும், படபிடிப்புக்கு செல்லும் நாளை எதிர்பார்ப்பதாகவும் யுமா குரேஷி கூறி இருக்கிறார்.

ஐஸ்வரியா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா என தமிழில் அறிமுகமான இந்திய நடிகைகள் வரிசையில் யுமா குரேஷி இடம் பிடிக்கலாம்.



ஹேமந்த் சதுர்வேதி - நீரவ்ஷா முதலில் ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. அவர்க்கு பதில், பில்லா 2 படத்தில் கேமராவை கையாள போகிறவர்...ஹேமந்த் சதுர்வேதி.

தமிழில் இவர்க்கு முதல் படம். ஆனால், இந்தியில் இவர் முன்னணி ஒளிப்பதிவாளர். ராம்கோபால்வர்மா இயக்கிய "கம்பெனி", மக்பூல் மற்றும் சாயப் அலிகான் நடித்த சமிபத்திய படமான "குர்பான்" ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள்.

பில்லா 2 படத்தில், ஷாட்டுகளில் புதிய வகை பாணிகளை கையாள போவதாக தெரிவித்து இருக்கிறார் ஹேமந்த்.

மற்ற தொழில்நுட்ப கலைஞ்ர்கள் ஏப்ரலுக்குள் முடிவு செய்யப்பட்டு, மே மாதம் துவங்கபடவிருக்கிறது அஜித்தின் "பில்லா 2 ".

Friday, April 8, 2011

அய்யா ஹஸாரே அவர்களுக்கு,



அய்யா,

இலவச அரிசி
இலவச டிவி
இலவச பிரிட்ஜ்
இலவச மிக்சி

இவையே பிரதானம்
எங்களுக்கு...

"ராணா"வில்
ரஜினியுடன் டுயட்
ஆடும் கதாநாயகி யார்?
எந்திரன் 2
வருமா? வராதா?
கமலின் அடுத்த படம்..
எந்த நடிகை
இன்று நம்பர் ஒன்..

இவைகள்தான்
எங்களுக்கு தெரிந்த
ஆராய்ச்சி..

வடிவேலு
விஜயகாந்தை பற்றி
இன்று என்ன பேசினார்??

கிரிக்கெட்டில்
யாருக்கு எத்தனை கோடி
கிடைத்தது?

தேர்தலில் எந்த கட்சி
எவ்வளவு கொடுக்கும்?

ஐ.பி.எல்லில் யார்
வெல்வார்கள்?
யுவராஜ் சிங்கின்
தற்போதைய காதலி யார்?

இவைகள்தான்
எங்களின் தேடல்கள்..


இலங்கையில் தமிழினம்
அழிந்தால் என்ன?
ஆயிரம்கோடி ஊழல்
யார் செய்தால் என்ன?

எனக்கு வரவேண்டியது
வருகிறதா என்று மட்டுமே
பார்க்கும் இனம் எங்கள் இனம்...

யாரோ ஒருவன்
கேட்பாரற்று சாலையில்
அடிபட்டு கிடந்தாலும்,
'ஐயோ பாவம்' என்ற படி
எங்கள் வழியில்
செல்வோம் நாங்கள்..

அய்யா,

எங்களுக்கெல்லாம் போய்...
எங்களின்
நன்மைக்காக...
சாகவும் துணிந்தீரே.

உங்களுக்கு
ஆதரவு தெரிவிக்க கூட
அருகதை இல்லாதவர்கள் நாங்கள்.

உங்கள் உடலும், நோக்கமும்
பூரண நலம் பெற..

குறைந்தபட்சம்
பிராத்தனை செய்கிறோம்.

இனி,
இந்தியாவுக்கு
இரண்டு சுதந்திர தினங்கள்.

ஒன்று
ஆகஸ்ட் 15.

இன்னொன்றாக..
அன்னா ஹஸாரே முன்மொழியும்
ஜன்லோக்பால் மசோதா
நிறைவேறும் நாளாக இருக்கட்டும்.




-இன்பா

Monday, April 4, 2011

நந்தலாலா,காவலன்,ஆடுகளம்,மைனா - சாரு நிவதிதா விமர்சனம்



தமிழ் சினிமா பல புரட்சிகரமான மாற்றங்களைக் கடந்தாக வேண்டியிருக்கிறது. ‘எந்திரன்’, ‘காவலன்’ போன்ற குப்பைகள், ‘மன்மதன் அம்பு’ போன்ற அரைவேக்காடுகள் தரும் கலாச்சார நெருக்கடிகளிலிருந்தும், கதை சொல்லும் அமைப்பிலிருந்தும் விடுவித்துக் கொள்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. ‘பருத்தி வீர’னைக் கொண்டாடினோம். ஆனால் அதிலும் வெகுஜன மசாலா சினிமாவின் உள்கட்டமைப்பிலிருந்து விலக முடியவில்லை. ‘போதும் நல்ல சினிமா’ என்று அடுத்த படத்துக்கு ஆஃப்ரிக்காவுக்குச் சென்று விட்டார் அமீர்.

மசாலா சினிமாவிலேயே சற்று வித்தியாசங்களைக் காட்டிய மிஷ்கின் முழுக்க முழுக்க ஜப்பானிய மொழிபெயர்ப்பை செய்து கொண்டிருக்கிறார். ‘நந்தலாலா’ ‘கிக்குஜிரோ’வின் அப்பட்டமான காப்பி என்று ஊரே சொல்லிக் கொண்டிருந்த போது அதை நான் வெகுவாக சிலாகித்ததன் காரணம், அது ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த சினிமா அனுபவத்தைக் கொடுத்தது என்பதால்தான். ஆனால் அதன் இயக்குனர் ‘கிக்குஜிரோ’விலிருந்து நான்கு சம்பவங்களை எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். படத்தில் இருப்பதே எட்டு சம்பவங்கள்தான். ‘நந்தலாலா’வின் அந்நியத்தன்மை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் தமிழ்ப் பார்வையாளர்கள் அந்தப் படத்தை நிராகரித்து விட்டார்கள்.

அந்த மொழிபெயர்ப்பு ஜப்பானிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தபோது இந்த மண்ணையும் அதன் சாரத்தையும் செரித்துக் கொள்ளவில்லை. பிடுங்கி நட்ட செடியாக, மண்ணின் உள்ளே செல்ல வழியின்றி செத்துவிட்டது (உதாரணமாக, ‘நந்தலாலா’வில் மோட்டார்பைக்கில் வரும் இரண்டு குண்டர்கள். அந்த உருவமோ, அவர்கள் பேசும் மொழியோ, அங்க அசைவுகளோ தமிழ் மண்ணுக்கு உரியதல்ல).

‘மக்களுக்கு ரசிக்கத் தெரியவில்லை; மக்கள் முட்டாள்கள்’ என்று மேடைதோறும் முழங்கிப் பயனில்லை. ‘காட்ஃபாத’ரிலிருந்து எடுத்த ‘நாயக’னை மக்கள் ரசித்தார்கள். அது மட்டுமல்ல; உலகின் சிறந்த நூறு படங்கள் என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ பட்டியலிட்ட போது அதில் ‘காட்ஃபாத’ரும் இருந்தது; ‘நாயக’னும் இருந்தது. இதுதான் பாதிப்பினால் எடுப்பது. ஆனால் அதே மணிரத்னத்தின் மற்றொரு இறக்குமதியான ‘ஆய்த எழுத்’தை (‘அமோரெஸ் பெர்ரோஸ்’) மக்கள் புறந்தள்ளி விட்டார்கள். காரணம், பாதிப்பு மட்டும் போதாது; புதிதாக நம் மண்ணுக்கேற்றபடி அதை சிருஷ்டிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மணிரத்னத்தின் முதுமை காரணமாகவோ (வயதைச் சொல்லவில்லை) அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ நம் அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தையே அவரால் மறுஆக்கம் செய்ய முடியவில்லை என்பதை ‘ராவண’னில் கண்டோம்.

இப்போது சொன்னால் மிஷ்கினோடு சண்டை வந்து விட்டதால் சொல்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் ஒருவரோடு எனக்குள்ள நட்போ, நட்பின்மையோ அவரது ஆக்கங்களை மதிப்பீடு செய்வதில் குறுக்கிடுவதே இல்லை. மிஷ்கின் மொழிபெயர்த்த சில ஹைக்கூ கவிதைகள் ‘வம்சி’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்திலும் மிஷ்கின் தன் சினிமா வேலையையேகாட்டியிருக்கிறார். ‘நந்தலாலா’வில் ‘கிக்குஜிரோ’வின் இயக்குனர் பெயர் இல்லாதது போலவே இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளில் அதை எழுதிய ஒருவர் பெயர் கூட இல்லை. ஒரு கவிஞர் அல்ல; அந்த ஹைக்கூ கவிதைகளைப் பல கவிஞர்கள் எழுதியிருப்பார்கள்.

அதாவது, திருவள்ளுவரிலிருந்து பாரதி வரை ஒரு 50 கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அதில் அந்தக் கவிஞர்கள் ஒருவரது பெயர் கூட இல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது மிஷ்கினின் மொழிபெயர்ப்பு நூல். சினிமாவில் காப்பி அடிப்பது, உருவுவது, அப்படியே மறுஆக்கம் செய்து நம்முடைய பெயரைப் போட்டுக் கொள்வது என்பதெல்லாம் கோடம்பாக்கத்து மரபாக இருக்கலாம்; ஆனால் இலக்கியம் நெருப்பு. இதில் அந்த சினிமா ஜிகினா எல்லாம் செல்லாது. மேலும், அந்த மொழி பெயர்ப்பில் உள்ள ஹைக்கூ கவிதைகள் எல்லாமே சராசரியானவை. இதை நாம் ‘உயிர்மை’ வெளியீடாக அபிலாஷின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஹைக்கூ கவிதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 15 ஆண்டுக் காலம் உதவி இயக்குனராக இருந்து படாத பாடுபட்டு ஒரு நல்ல சினிமாவை எடுத்து விடும் ஒரு இயக்குனர், அடுத்த நாளே தன்னை ஒரு சமூகவியல் அறிஞனாக, தத்துவவாதியாக, இலக்கியவாதியாக, கவிஞனாக, புரட்சியாளனாக கற்பித்துக் கொள்கிறார். எல்லாவற்றுக்கும் என்னால் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் அவர்களெல்லாம் என் நண்பர்கள் என்பதால் கோபித்துக் கொள்வார்கள். ஒரு படம் வெற்றி அடைந்ததுமே இலங்கைப் பிரச்சினைக்கெல்லாம் தீர்வு சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். முதலமைச்சரோடு விவாதிக்கிறார்கள். சிறைக்குச் செல்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு சேகுவேரா அளவுக்கு, அமர்த்யா சென் அளவுக்கு, ஓரான் பாமுக் அளவுக்கு அவர்களின் அந்தஸ்து உயர்ந்து விடுகிறது. இதற்கு ஊடகங்களும் ஒரு காரணம். மிஷ்கினின் மொழிபெயர்ப்பு பற்றி பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. அடைப்புக் குறிக்குள் ‘சாருநிவேதிதா படித்தாரா?’ என்று கேள்வி. அந்தக் கேள்வியால்தான் படித்தேன். ஜப்பானிய மூலத்தில் எழுதிய கவிஞர்களின் பெயர்களையே இருட்டடிப்பு செய்து விட்டு ஒரு புத்தகமா? சினிமாவில் என்ன வேண்டுமானாலும் அக்கிரமம் செய்து கொள்ளுங்கள். அங்கே அதைத் தட்டிக் கேட்க நாதியில்லை. ஆனால் இலக்கிய உலகம் அப்படி இல்லையே?

ஊடகங்கள் சினிமாக்காரர்களுக்குக் கொடுக்கும் அளவிட முடியாத முக்கியத்துவத்தின் காரணமாகவே இவர்களுக்கு இந்தப் பூதாகாரமான பிம்பம் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் லிங்குசாமியும் மிஷ்கினும் ஒரு கருத்தரங்கில் பேசிய பேச்சை இங்கே உதாரணம் காட்ட விரும்புகிறேன். லிங்குசாமி சொல்கிறார்: “நல்ல கதை இருந்தால் என்னிடம் வாருங்கள்; என் கதவுகள் திறந்தே இருக்கும். வேண்டுமெனில் நானே கூட அவர்களைத் தேடிச் செல்வேன்.” மேடையில் பேசி கைதட்டல் பெறுவதற்கு மட்டும்தான் இது போன்ற பேச்சுக்கள் உதவுமே தவிர, இதில் கொஞ்சமும் உண்மை இல்லை.

இதற்கு எஸ். ராமகிருஷ்ணன் அந்தக் கூட்டத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார். சினிமாவாக எடுப்பதற்கு புதுமைப்பித்தன், கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், ஆதவன், அசோகமித்திரன் தொடங்கி இன்றைய எஸ். ராமகிருஷ்ணன் வரை ஐம்பது எழுத்தாளர்களின் 100 கதைகள் தமிழில் இருக்கின்றன. இதுகூட குறைந்தபட்ச கணக்குதான். ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யைப் படமாக எடுத்தால் உலகம் பூராவும் திரும்பிப் பார்க்கும்; ‘ஆஸ்கர்’ பரிசும் நிச்சயம். அதில் பாண்டியனாக நடிப்பவர் உண்மையிலேயே உலக நாயகனாகக் கொண்டாடப்படுவார். அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’, சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை’ என்ற இரண்டு நாவல்களையும் சினிமாவாக எடுத்தால் தமிழ் சினிமா பற்றிய சினிமாவாக அது இருக்கும். வசூல் பிய்த்துக் கொண்டு போகும். இந்தியில் இப்படி நடந்து கொண்டிருக்கிறது. தமிழில் பிரச்சினை என்னவென்றால், இங்கே இயக்குனர்களுக்குத் தமிழ் இலக்கியம் பற்றிய பரிச்சயமோ வாசிப்போ இல்லை. இல்லாதது கூடப் பரவாயில்லை. இலக்கியம் தெரியாதது ஒரு குற்றம் அல்ல; ஆனால் அந்த அறியாமையையே ஒருவர் எப்படி பெருமையாகவும், கௌரவமாகவும் கொள்ள முடியும்?

அந்தப் பரிகாசத்துக்குரிய விஷயம்தான் தமிழ்ச் சூழலில் நடந்து கொண்டிருக்கிறது. புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் இயக்குனர்கள் மேடை ஏறியதுமே பார்வையாளர்கள் பரிகாசமாகச் சிரிக்கிறார்கள். அதன் அர்த்தம் புரியாத இயக்குனர்களும் “நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை; எந்தப் புத்தகமும் படிப்பதில்லை; படித்தால் கண்ணில் பூச்சி பூச்சியாகப் பறக்கிறது” என்று ஆரம்பித்து மேலும் பரிகாசச் சிரிப்பு அலைகளைக் கிளப்பி விடுகிறார்கள்.

தமிழில் குறைந்த பட்சம் நூறு கதைகளை வைத்துக்கொண்டு கதை இல்லை என்பது இயக்குனர்களின் அறியாமையைத்தானே காட்டுகிறது? நூற்றுக்கணக்கான கதைகள் இங்கே புத்தகங்களாக இருக்கும் போது ‘கதையோடு என் அலுவலகம் வாருங்கள்’ என்றால் என்ன அர்த்தம்? ‘அறியாமையில்தான் உழல்வோம்; மாறவே மாட்டோம்’ என்பதைத்தான் இந்த இயக்குனர்கள் சூசகமாகத் தெரிவிக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. சுஜாதா எவ்வளவோ கதைகளை எழுதியிருக்கிறார். ஆனால் அவருடைய கதைகள் சினிமாவில் வன் கொடுமைக்கு ஆளானதையே கண்டோம். பிறகு அவர் வெறும் வசன கர்த்தாவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார். இதெல்லாம் தமிழ் சினிமாவின் அவலங்களில் ஒன்று (கேரளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயரின் கதைகள் முப்பதுக்கும் மேல் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 60 படங்களுக்கு திரைக்கதை- வசனம் எழுதியிருக்கிறார்).

இன்னொரு அவலம் ‘காவலன்’ போன்ற படங்களால் ஏற்படும் மிக மோசமான கலாச்சார, அரசியல் விளைவுகள். மனிதனின் சுரணையுணர்வைக் காயடிக்கும் இம்மாதிரி படங்களில் ஹீரோ வேஷம் போடுபவர்கள்தான் தமிழக அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கின்றார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் சீரழிவுக்குக் காரணம். இந்தப் படத்தின் வெளியீட்டைத் தடுக்க நினைத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக இயங்கும் ஹீரோ ஆகிய இரு சாராருமே தமிழ்க் கலாச்சார சீரழிவின் இரண்டு பக்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று சொல்லலாம்.

ஹீரோ விஜய் இந்தப் படத்தை வெளியிடுவதில் இருந்த சிக்கலைத் தீர்ப்பதற்காகத் தன் சொந்தப் பணத்திலிருந்து மூன்று கோடி ரூபாயை இழந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ‘இவ்வளவு பெரிய தியாகியா?’ என்று முதலில் பயந்து விட்டேன். பிறகுதான் தெரிந்தது, அவர் இந்தப்படத்துக்கு வாங்கிய 18 கோடி ரூபாய் சம்பளத்திலிருந்து மூன்று கோடியைத் தான் திருப்பிக் கொடுத்தார்; அதுவும் அவருடைய தந்தை அன்றைய தினம் அடைந்த கோபமும் மன வேதனையும் சொல்லி மாளாதது (முதல் மந்திரி ஆவதற்காக).

செங்கல் செங்கல்லாக வைத்து செதுக்கிக் கொண்டிருக்கும் மகனின் எதிர்காலத்துக்கு எதிராக ஒரு கூட்டமே சதி செய்கிறதே; ஒரு நல்ல தந்தையான அவர்தான் என்ன செய்வார்? இப்படிப்பட்டவர்கள்தான் இந்த தேசத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்! முதல் மந்திரி நாற்காலியைப் பற்றிய கனவில் இருக்கும் ஹீரோ நடிகர்கள் யாவருக்கும் அந்த வேலை சினிமாவில் நூறு அடியாட்களைத் தூக்கிப் பந்தாடுவதைப் போன்ற காரியமாகவே தோன்றுகிறது. அப்படிப் பந்தாடுவது ஒரு பொய் என்பதை மறந்து அவர்களே அதை நிஜம் என்று நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் நம்பினால் பரவாயில்லை; மக்கள் கூட்டமும் நம்புகிறது என்பது அரங்கத்தில் கிளம்பும் விசில் சத்தங்களிலிருந்து தெரிகிறது.

இந்தக் கொடுமையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி, நல்ல சினிமாவின் பக்கம் திரும்புவதுதான். சமீபத்தில் அப்படிப்பட்ட இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று, ‘ஆடுகளம்’.இரண்டாவது, ‘மைனா’. ஆனால் இந்த இரண்டு படங்களும் கூட கலாச்சார சீரழிவில் முன்னணியில் நிற்கும் நிறுவனங்கள்தான் என்பது யாருமே புரிந்துகொள்ள முடியாத பின்நவீனத்துவ சிக்கல்! ‘ஆடுகளம்’ ஒரு அசலான சினிமா. தனுஷின் சினிமா வாழ்வில் இது அவருக்கு ஒரு சாதனைப் படமாகத் திகழும். பேட்டைக்காரனாக நடித்திருக்கும் என் நண்பனும் கவிஞனுமான வ.ஐ.ச.ஜெயபாலனைப் பற்றிச் சொல்ல வேண்டும். “மச்சான், எப்படி நடிச்சிருக்கேன்?” என்று படத்தின் இடையிலேயே அவனிடமிருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

சிவாஜிக்குப் பிறகு நீதான் என்று பதில் அனுப்பியதை அவனால் நம்ப முடிந்திருக்காது. ஆனால் அது பகடி அல்ல; உண்மை. நடிப்பு என்பது பிறவியிலேயே அமையும் ஒரு பரிசு என்று அடிக்கடி சொல்லுவார் பாலு மகேந்திரா. அதுதான் ஜெயபாலனை அந்த வெள்ளைத்திரையில் பார்த்த போது ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. ஜெயபாலனிடம் “உனக்கு நடிப்பில் அனுபவம் இருக்கிறதா? இந்தப் போடு போடுகிறாயே?” என்று கேட்டேன். அதற்கு “நீ வேற மச்சான்; என் மனைவிக்கு எதிரில் தவிர வேறு எங்கேயும் நடித்ததில்லை; பள்ளி நாடகத்தில் கூடத் தலை காட்டியதில்லை” என்றான். அவன் திரையில் நடிக்கவே வேண்டாம் போலிருக்கிறது; அவன் வந்து நின்றாலே அப்படி ஒரு மலைப்பு ஏற்படுகிறது நமக்கு. அவனுடைய கண்களும், ஆகிருதியும், அந்த மீசையும், பழுப்பு நிறத் தோலும் ஒரு தேர்ந்த நடிகனுக்கென்றே படைக்கப் பட்டதாகத் தோன்றியது.




பொதுவாக நான் எந்தப் படத்தையும் ஒரு அவசியம் ஏற்பட்டால் ஒழியப் போய் பார்க்க மாட்டேன். ‘கலா கௌமுதி’ ஆசிரியர் “இங்கே கேரளத்தில் ‘மைனா’ என்ற ஒரு படம் இதுவரை இல்லாத அளவுக்கு சக்கைப் போடு போடுகிறது; ஊரெங்கும் இதுபற்றியே பேச்சாகக் கிடக்கிறது. அதுபற்றி எழுதுங்கள்” என்று இரண்டு மாதமாக என்னிடம் சொல்லிச் சொல்லி அலுத்து விட்டார். ஆனால் போய்ப் பார்க்கவில்லை (அது எவ்வளவு பெரிய தவறு என்று பார்த்த பிறகு தெரிந்தது; அதற்குப் பின்னால் வருகிறேன்). அப்படிப்பட்ட நான் வெற்றிமாறனின் ‘ஆடுகள’த்தை முதல் காட்சியே போய்ப் பார்த்தேன்.

அவருடைய ‘பொல்லாதவன்’ அத்தகைய எதிர்பார்ப்பை என்னுள் ஏற்படுத்தியிருந்தது. மதுரை பற்றி வந்த படங்களில் மிக முக்கியமான படம் ‘ஆடுகளம்’. இதில் வரும் காதலை மட்டும் எடுத்து விட்டால் இதை சர்வதேசத் தரம் வாய்ந்த படம் என்று சொல்லி விடலாம். தான் என்ற ஆணவம் ஒரு மனிதனின் சீரழிவுக்கு எப்படிக் காரணமாக அமைகிறது என்பதே படத்தின் களம். பெருந்தச்சனில் வரும் சிற்பிதன் மகன் தன்னை விட சிறந்தவனாக ஆகும்போது மகனைக் கொன்று விடுகிறான். அதேபோல் பேட்டைக்காரனும் (ஜெயபாலன்) தன் சீடன் சேவல் சண்டையில் தன்னை விட வித்தைக்காரனாக மாறும்போது அவனை அழிக்கத் துடிக்கிறான். இந்த நாடகக் கருவை அற்புதமான சினிமாவாக சிருஷ்டித்திருக்கிறார் வெற்றிமாறன். ‘மதராசப் பட்டண’த்துக்கு எழுதிய மதிப்புரையில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை பற்றிக் குறிப்பிட்டு இன்னும் இரண்டு படங்களுக்கு இதே போல் இசையமைத்தால் நான் அவரது ரசிகனாகி விடுவேன் என்று எழுதியிருந்தேன். இரண்டு வேண்டாம்; இந்தப் படமே போதும். கதைக்களனுக்கு ஏற்ற மிகப் பொருத்தமான இசை.

‘மைனா’வை இத்தனை தினங்கள் பார்க்காமல் விட்டது பற்றி வருந்துகிறேன். இப்படி ஒரு படத்தை தமிழில் இதுவரை பார்த்ததில்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ் சமூகத்தில் இதுகாறும் சொல்லப்பட்டு வந்த ஒரு பொய்யை இந்தப் படம் அடித்து நொறுக்கியிருக்கிறது. அந்தப் பொய்யை நம்பித்தான் தமிழ் சினிமாவே கொஞ்ச காலம் பிழைத்துக் கொண்டிருந்தது. அந்தப் பொய், தாய். ‘மைனா’வில் வரும் தாய் நாம் தமிழ் சமூகத்தில் நிஜமாகப் பார்க்கும் தாய். காதலனுக்காகத் தன் பிள்ளையைக் கொன்று குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் எத்தனை தாய்மார்களைத் தினசரிகளில் பார்க்கிறோம்? அப்படிப்பட்ட தாய்தான் மைனா என்ற பெண்ணின் அம்மா. மைனாவின் காதலை எதிர்க்கும் அவள், மைனா தன் காதலன் சுருளியோடு ஊரை விட்டுப் புறப்படும்போது “இருவரும் அழிந்து போவீர்கள்” என்று மண்ணை வாரித் தூற்றுகிறாள். இவ்வளவுக்கும் அவளையும் மைனாவையும் பல வருடங்களாக சோறு போட்டுக் காப்பாற்றியவன் சுருளி.

நடுத்தர வர்க்கத்திடம் நிலவும் கருத்தியல்களான தாய்மை, பாசம், அன்பு, குடும்பம் போன்றவற்றின் போலித்தன்மையை மிகக் காட்டமாகக் கிழித்துப் போடுகிறார் ‘மைனா’வின் இயக்குனர் பிரபுசாலமன். தமிழ் சினிமாவில் முதல்முதலாக நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம் இது. ஒரு காட்சியில் ஒரு ஆள் தன் கைத்தொலைபேசியில் “இப்போது நீ ஆறு பேரை வைத்திருக்கிறாய்; இன்னொருவனையும் வைத்துக் கொள்வேன் என்றால் என் மானம் மரியாதை என்ன ஆவது?” என்று தன் மனைவியிடம் சொல்லி முத்தம் கொடுக்கிறான். சில மாதங்களுக்கு முன்னால் தினசரியில் வந்த செய்தி ஒன்று ஞாபகம் வருகிறது. திருமணமான ஒரு பெண் தன் கணவனைத் தவிர்த்து இன்னொருவனைக் காதலிக்கிறாள். அவனோ அவளுடன் கொஞ்ச நாள் கூடி சுகித்து விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். உடனே இந்தக் குடும்பவதி தன் கணவனிடம் சொல்லி அவனைக் கொல்லச் செய்கிறாள். கணவனும் தன் காதல் மனைவிக்காக அவளுடைய காதலனின் தலையைக் கொய்து வந்து தன் மனைவியின் காலில் போடுகிறான்.

‘இந்தப் படத்தின் இசை (இமான்) மற்றும் வசனம் மிகுந்த பாராட்டுக்குரியவை. அதிலும் அந்தத் துணை அதிகாரியாக வருபவனின் வசனங்கள் மிகவும் கூர்மையானவை. அடுத்து சிலாகித்து சொல்ல வேண்டியது, இதில் பங்கேற்று நடித்திருப்பவர்களின் மிகத் தேர்ச்சியான நடிப்பு. இவ்வளவுக்கும் யாருடைய முகமும் பார்த்த முகமாக இல்லை. ஒளிப்பதிவு மற்றொரு சிறப்பு அம்சம். பெரியகுளம், மூணாறு, குரங்கணி என்று அடர்ந்த காடுகளில் செயற்கை வெளிச்சம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார் சுகுமார்.




ஆங்கிலத்தில் ‘பொயடிக் ஜஸ்டிஸ்’ என்று சொல்வார்கள். அப்படித்தான் ஒவ்வொரு திரைப்படமும், இலக்கியப் பிரதியும் முடிவடையும். ஆனால் அந்த வசதியெல்லாம் அடித்தட்டு மக்களுக்குக் கிடையாது என்று முடிகிறது ‘மைனா’. எல்லையற்ற துயரம் மட்டுமே மிஞ்சும் ஒரு முடிவு. பொதுவாக கெட்டவர்களின் சாபம் பலிக்காது என்பதே கவிதையின் நியாயம். அதுகூட இந்தப் படத்தில் நடக்காதது பிரபுசாலமனின் துணிச்சலையும், புரட்சிகரச் சிந்தனையையும் காட்டுகிறது.

ஆனால், ‘பருத்தி வீர’னை அடிக்கடி ஞாபகப்படுத்துவதை ‘மைனா’வின் முக்கியமான குறை என்று சொல்ல வேண்டும். சுருளியின் பாவனைகள் அனைத்தும் ‘பருத்தி வீரன்’ கார்த்தியைப் போல் இருக்கிறது. சுருளியின் தோழனான சின்னப் பையன் பெரியவர்களைப் போல் பேசுகிறான். இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். இருந்தாலும் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத பல சங்கதிகள் ‘மைனா’வில் உண்டு.

(எழுத்தாளர் சாரு நிவேதிதா,நன்றி : உயிர்மை பதிப்பகம்)

 
Follow @kadaitheru