Monday, November 3, 2014

மீண்டு(ம்) வருமா "களவாடிய பொழுதுகள்"


கிராமத்து படம் என்றாலே அதன் களம் மதுரை பக்கம் இருக்கும் கிராமமாகத்தான் இருக்கவேண்டும் என்று இயங்கி கொண்டிருந்த தமிழ் சினிமாவில், வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, கிராமங்களை மண்வாசனையோடு சொன்னவர்/சொல்லிவருபவர் இயக்குனர் தங்கர்பச்சான்.

அவரது 'அழகி' ஒரு சர்வதேச தரம் வாய்ந்த, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலை படைப்பு. சொல்ல மறந்த கதை, ஒன்பது ருபாய் நோட்டு போன்ற படங்கள் வாழ்க்கையை பேசுபவை.

களவாடிய பொழுதுகள் - தங்கரின் அடுத்த படம்.

லண்டன் அய்ங்கரன் தயாரிப்பில், பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். பூமிகா, இன்பநிலா இவர்களுடன் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ்.

இதில் இன்பநிலா, கேரளா இறக்குமதி நடிகைகளுக்கு இடையே நம்ம தமிழ் நாட்டை சேர்ந்தவர். ஒன்பது ருபாய் நோட்டு மூலம் கவனம் பெற்றவர்.

தங்கர்பச்சான் முன்பு எழுதிய கதைதான் அதே பெய‌ரில் சினிமாவாகிறது. இதுவொரு கம்யூனிஸ்டின் கதை. பிரபுதேவா கம்யூனிஸ்டாக வருகிறார்.
மே தினம் அன்று பெ‌ரியார் கொடியேற்றும் நிகழ்ச்சி படத்தில் இடம் பெறுகிறது. பெ‌ரியாராக சத்யரா‌ஜ் நடிக்கிறார். இந்த‌க் காட்சியில் பாடல் ஒன்றையும் வைத்திருக்கிறார் தங்கர்பச்சான். பரத்வா‌ஜ் இசையில் உருவாகியிருக்கும் அந்தப் பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள் யூனிட்டில்.

'யதார்த்த சினிமாவின் இன்னொரு ப‌ரிமாணமாக களவாடிய பொழுதுகள் இருக்கும்' என்று கூறிஇருந்தார் தங்கர்.

படம் முடிவடைந்தும் வெளிவராமல் இருக்கும் பல நூறு படங்களில் ஒன்றாகிவிட்டது இந்தப்படம்.

2012 ல் முடிந்துவிட்ட இந்த படத்தின் பாடல்கள், இப்பொதுதான் வெளிவந்து இருக்கின்றன. மொத்தம் ஐந்து பாடல்கள். அதில், தந்தை பெரியார், தோழர் ஜீவானந்தம் ஆகியோரின் கருத்துக்களை, அவர்கள் இக்கால தமிழர்களுக்கு கூறுவது போல அமைக்கப்பட்டு இருக்கும் பாடல் "சேரனேங்கே, சோழனேங்கே" என்னும் பாடல்.

"தமிழனை அழிக்க சவப்பெட்டி தேவை இல்லை. டிவிப்பெட்டி ஒன்றே போதும்" என்ற பெரியாரின் கருத்து, சத்யராஜின் குரலில் இடியாய் இறங்குகிறது.

 "களவாடிய பொழுதுகள்" தடைகளை கடந்து வெளிவரவேண்டும்.

யதார்த்த சினிமா மீது நம்பிக்கை கொண்ட, நல்ல படங்களை மட்டுமே கொடுப்பதை தனது கொள்கையாக வைத்து இருக்கும் தங்கர்பச்சான் போன்ற இயக்குனர்கள் நிலைத்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு மிக அவசியம்.

 'களவாடிய பொழுதுகள்' விரைவில் முடிந்து வெளிவரும் என்று நம்புவோம்.

-இன்பா


0 comments:

 
Follow @kadaitheru